vaiko
பனிரெண்டாம் வகுப்பு வேதியியல் பாடப் பிரிவில் கேட்கப்பட்ட வேள்விகள் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ’’தமிழகத்தில் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வேதியியல் பாட கேள்வித் தாள் பதிலளிக்க முடியாமல் மிகவும் கடினமாக இருந்ததால் சரியாக பதலிளிக்க முடியவில்லை என்ற மன வருத்தத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாணவியும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு மாணவியும் தற்கொலை செய்துள்ளது மிகவும் வேதனைக் குரியதாகும்.
பள்ளித் தேர்வுகள் மாணவ -மாணவிகளுக்கு எந்த அளவிற்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்தச் சம்பவம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கிறது. இத்தகைய சூழலிலிருந்து மாணவ, மாணவிகள் விடுவிக்கப்படவேண்டும். தேர்வுகளை பயமில்லாமல் ஆர்வத்துடன் எதிர்கொள்ள உளவியல் ரீதியாக மாணவர்களை தயார் செய்யும் பணியை பள்ளி கல்வித்துறை மிகவும் முக்கியமான பொறுப்பாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
இந்த வருடம் பனிரெண்டாம் வகுப்பு வேதியியல் பாடப் பிரிவில் கேட்கப்பட்ட வேள்விகள் வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விமுறையிலிருந்து மாறுபட்டு, பதிலளிக்கக் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்வி கற்பிக்கப்படும் முறையில் மாற்றம் கொண்டு வந்து மாணவர்களைத் தயார் செய்துவிட்டு, கேள்வித்தாள்களில் மாற்றம் கொண்டுவந்தால் மாணவர்கள் அதை எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, கேள்வித் தாள்களில் திடீரென மாற்றம் கொண்டு வந்ததால் எதிர்கால கனவுடன் தேர்வு எழுதச் சென்ற மாணவ – மாணவிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். வரும் கல்வி ஆண்டில் கல்லூரி வாய்ப்புகள் பறிபோய்விடுமோ என்ற மன உளைச்சலில் உள்ளனர்.
இந்த வருடம் சி.பி.எஸ்.சி., கணக்குப் பாடத் தேர்வு பதிலளிக்க முடியாத வகையில் கடினமாக இருந்ததால், சி.பி.எஸ்.சி. வாரியம் நிபுணர் குழு அமைத்து தீர்வு காண முடிவு செய்துள்ளன. வேதியியல் பாடம் மாணவர்களின் எதிர்கால வாய்ப்புகளுக்கு மிக முக்கியமான பாடம் ஆகையால், தமிழக பள்ளிக் கல்வித்துறை இந்த வருடம் வேதியியல் தேர்வு குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் திறனுக்கு அதிகமான கடினமான கேள்விகள் இருக்குமானால் மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’என்று தெரிவித்துள்ளார்.