07sli4

திரையில் வராத உண்மைகள் தொடரை படித்த பல வி.ஐ.பி.கள் தங்களது அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.  அவர்களில் ஒருவர் முக்தா ரவி. முக்தா பிலிம்ஸ் என்பது மிக பிரபலமான தயாரிப்பு நிறுவனம். பல்வேறு நடிகர்களை வைத்து படம் எடுத்த இந்த நிறுவனம் ரஜினியைவைத்து இரண்டு படங்களை எடுத்துள்ளது. அப்போது ஏற்பட்ட அனுபவத்தைத்தான் முக்தா ரவி சொல்கிறார்.

“அந்க சமயத்தில் நான், எங்களது முக்தா பிலிம்ஸுக்கு புரடக்சன் சைடில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன் அப்போது ரஜினிகாந்த், சென்னை ராயப்பேட்டை மாடியில் கூரை போட்ட வீட்டில் இருந்தார்.  ஒரு காரும், வெஸ்பா ஸ்கூட்டரும் வைத்திருப்பார். அதில்தான் சர், புர் என்று பறப்பார்.

எங்களது முக்தா பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ரஜினியை ஒப்பந்தம் செய்தோம். அப்போது ரஜினி, விஸ்வநாத் என்ற இந்தி படத்தைக் கொடுத்து, “இந்த படத்தைப் பாருங்கள். மிக நன்றாக இருக்கும். இதையே நாம் தமிழில் பண்ணலாம்” என்றார்.

அது சத்ருகன் சின்கா நடித்தபடம். ரஜினிகாந்த், சத்ருகன் சின்காவின் தீவிர ரசிகர்.  அவரைப்பார்த்துதான், இவர் தலை முடியை கையால் சீவிக்கொள்வது, சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிப்பது போன்ற ஸ்டைல்களை செய்தார். அந்த அளவுக்கு சத்ருகன் சின்காவின் ரசிகர்.

நானும் ரஜினி கொடுத்த படத்தின் வீடியோவை போட்டுப்பார்த்தேன். முதல் நான்கு காட்சிகள் விறுவிறுப்பாக சிறப்பாக இருந்தன. ஆனால் அதற்குப்பிறகு வரிசையாக கோர்ட் சீன்கள் வந்தன. அவை அத்தனை சுவாரஸ்யமாக எனக்கு படவில்லை.

200px-பொல்லாதவன்_(1980)

 

இதை என் தந்தை முக்தா சீனிவாசனிடம் தெரிவித்தேன். அவரோ, “படத்தின் நாட் நன்றாக இருக்கிறது. ஆகவே இதையே செய்யலாம். தமிழுக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் மாற்றிவிடலாம்” என்றார்.

ஆனால், எனக்கு அது உடன்பாடாக இல்லை. ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டேன்.

அடுத்த நாள், நான் அஸிஸ்டண்ட் டைரக்டர் இருவரும் ரஜினியை பார்க்கச் சென்றோம். ரஜினி உற்சாகமாக, “அந்தப்படத்தை பார்த்தீர்களா.. பிடித்திருந்ததா” என்று கேட்டார்.

 

நான்,” நல்லா இருக்கு…” என்றேன். ஆனாலும் என் முகபாவத்தை வைத்து கண்டுபிடித்துவிட்டார் ரஜினி.

“உங்களுக்கு பிடிக்கலேன்னா வேறு படம் பார்க்கலாம்” என்று இயல்பாக சொன்னார் ரஜினி.

அப்போதே அவர் வளர்ந்துவிட்ட நடிகர். தொடர்ந்து சக்ஸஸ் கொடுத்து வந்தவர். அவரே ஹீரோவாக நடிக்கும் சத்ருகனின் படத்தை நான் நிராகரித்தது பற்றி தவறாக நினைக்கவில்லை.  அதோடு, முக பாவத்தை வைத்தே எதிரில் இருப்பவரின் மனநிலையை நொடியில் அறிந்துகொள்ளும் குணம் அவருக்கு உண்டு. இந்த பெரும் குணங்கள்தான் அவரை மிகப்பெரிய உயரத்தில் வைத்திருக்கிறது.

அதன் பிறகு என்னுடைய நண்பர் தயாரிப்பாளர் பாலாஜி, ஒரு வீடியோவை கொடுத்தார். “ராஜ்குமார் நடித்த “பிரேமத காணிக்கே”   என்ற கன்னடபடம் இது. இதை ரஜினியை பார்க்கச் சொல். அவருக்கு நிச்சயம் பிடிக்கும். படம் சூப்பர் ஹிட் ஆகும்” என்றார்.

 

கர்ணன்
கர்ணன்

அந்த படத்தைச் சொன்னவுடனேயே, “பிரேமத காணிக்கே படம் தானே…   இதை நான் ஏழெட்டு முறை பார்த்துவிட்டேன். அருமையான படம்” என்று மகிழ்ந்தார் ரஜினி.

அந்த படம்தான், “பொல்லாதவன்”  என்று உருவானது. ரஜினி ஹீரோ. ஸ்ரீபிரியா, லட்சுமி ஆகியோர் ஹீரோயின்கள்.

படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் பெங்களூருவில் நடந்தது.

லலித் மகால்.. சாமுண்டீஸ்வரியிலதான் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டன.  ஒரு ஃபைட் சீன் மட்டும் சென்னையில செட்டிங் போட்டு எடுத்தோம். அடுத்ததா, சிம்லாவுக்கு போய் ஒரு பைட், ஒரு பாட்டு சீன் எடுக்கணும். அங்கே லொக்கேசன் பார்க்க போனேன். ஒரே வறட்சியாக இருந்தது. அதனால், காஸ்மீரில் எடுக்க திட்டமிட்டோம்.

அதன்படி படப்பிடிப்புக்குழு காஸ்மீர் போய் சேர்ந்தது. புகழ்பெற்ற, “அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்..:  என்ற பாடல் காஸ்மீர் தால் ஏரி பகுதியில் படமாக்கப்பட்டது. அடுத்தாதக ஒரு சண்டைக் காட்சி. அதில்தான் ஒரு சிக்கல் ஏற்பட்டது.

இந்த நேரத்தில் படத்தின் ஒளிப்பதிவாளர் கர்ணன் பற்றி சொல்ல வேண்டும். ஏறத்தாழ 150 திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும் 25 திரைப்படங்களில் இயக்குநராகவும் பணியாற்றியவர்.

கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் கற்பகம் திரைப்படத்தில் அறிமுகமாகிய கர்ணன் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், சிம்லா ஸ்பெஷல் உட்பட முன்னணி ஹீரோக்களின் பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.  சாகச காட்சிகளைத் திறம்பட படம் பிடிப்பவர். அவருக்கு சாகச ஒளிப்பதிவாளர் என்றே பெயர் உண்டு.

இவர் இயக்கிய ஜம்பு திரைப்படத்தில் அந்தக் காலத்திலேயே நீருக்கு அடியில் எடுக்கப்பட்ட காட்சிகள் இப்போதும் பிரமிக்க வைக்கும்.

குதிரை சேஸிங்கை இவருக்கு இணையாக படம் பிடிப்பவர்கள் இல்லை  என்பார்கள்.

எம்‌ஜிஆ‌ரின் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், சிவா‌ஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற அமர காவியங்களுக்கு  இவர் செய்த ஒளிப்பதிவு இன்றும் நம் கண்ணில் நிற்கும்.

எம்ஜிஆர் தனது நீதிக்குத் தலைவணங்கு படத்தின் சண்டை, சேஸிங் காட்சிகளை இவரை வைத்துதான் எடுத்தாராம்.

இப்போது போல அப்போது கேமராக்கள் சிறிதாக இருக்காது. பெரிதாக வெயிட்டாக இருக்கும். ஆனால் அதை தனது தோளில் வைத்துக்கொண்டு பரபரவென சண்டைக்காட்சிகளை படமாக்குவார் கர்ணன்.  அவர், காட்சிகளை படமாக்கும் விதத்தைப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கும்.

அப்படித்தான் காஸ்மீர் தால் ஏரியில் பொல்லாதவன் படத்துக்காக ரஜினியை வைத்து சண்டைக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்தார் கர்ணன். புதுவிதமாக இருக்க வேண்டும் என்பதற்காக, படகில் வைத்தே ஃபைட் காட்சிகளை எடுத்தோம். இந்தி துணை நடிகர்களை வைத்து அந்த சண்டைக் காட்சி  விறுவிறுப்பாக எடுத்து முடிக்கப்பட்டது. எல்லோருக்கும் திருப்தி.

அப்போதுதான் கர்ணன் பதறினார். அவர் அணிந்திருந்த விலை உயர்ந்த வைர மோதிரம் ஏரியில் விழுந்துவிட்டது! காட்சிகளை படமாக்கும் ஆர்வத்தில் கர்ணன் கவனிக்கவில்லை.  பிறகுதான் பார்த்திருக்கிறார்.

விலைமதிப்பற்றது என்பது ஒருபுறம், அவருக்கு ராசியான மோதிரம் என்பதால் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார்  கர்ணன்.

படப்பிடிப்பு முடிந்து கிளம்பினோம். எல்லோரும் டில்லி வந்து சேர்ந்தோம். அங்கிருந்து சென்னை வர வேண்டும்.

டில்லி வந்ததும், முதல் வேளையாக கர்ணனை அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பினார் ரஜினி. என்ன ஏது என்று சொல்லவில்லை.  நேராக புகழ் பெற்ற நகைக்கடைக்கு அழைத்துச் சென்றே, ஏற்கனெவே கர்ணன் அணிந்திருந்த்தது போலவே வைர மோதிரம் ஒன்றை வாங்கி பரிசளித்துவிட்டார் ரஜினி. கர்ணன் மறுத்தும் விடவில்லை.

ரஜினி இப்படி செய்வார் என்று கர்ணன் நினைக்கவே இல்லை. எதிர்பாராமல் தொலைந்த தனது மோதிரம் எதிர்பாராமல் கிடைத்துவிட்டதாக செண்ட்டிமெண்ட்டாக கர்ணனுக்கு மகிழ்ச்சி.

இந்த விசயம் தெரிந்தவுடன், என் அப்பா  முக்தா சீனிவாசனும் பெரியப்பா முக்தா ராமசாமியும் நெகிழ்ந்து போய்விட்டார்கள். உடனடியாக அவர்கள் ரஜினியிடம், “படத்தை தயாரிப்பவர்கள் நாங்கள். ஆகவே,  நாங்கள்தான் மோதிரம் வாங்கித்தரவேண்டும். அதற்கான பணத்தை பிடியுங்கள்” என்று கொடுத்தார்கள்.

ரஜினி மறுத்தார். இவர்கள் பிடிவாதம் பிடிக்கவே.. “இங்கே வேண்டாம் சென்னை வந்ததும் வாங்கிக்கொள்கிறேன்” என்றார்.

அதன் பிறகும், “இன்று நாள் சரியில்லை.. இன்னொரு நாள் வாங்கிக்கொள்கிறேன்” என்று தட்டிக்கழிப்பார் ரஜினி.

என் பெரியப்பா, “எனக்கு மறுபடி நீ கால்சீட்டே தர வேண்டாம். ஆனால்

இந்த பணத்தைப் பிடி” என்றும் சொல்லி விட்டார். ஆனால் ரஜினி தட்டிக்கழித்தபடியேதான் இருந்தார். பிறகு பல ஆண்டுகள் கழித்து, “சிவப்பு சூரியன்” என்ற படத்தில் எங்கள் பேனருக்காக நடித்தார். அப்போதும் மோதிரத்துக்கான பணத்தை வாங்கிக்கொள்ளவில்லை.
இதனால் ரஜினியிடம் என்  பெரியப்பா முக்தா ராமசாமி, “என்னை கடன் காரன் ஆக்கிட்டியே” என்று வேடிக்கையாக சொல்வது உண்டு.

பணத்தைவிட, மனிதர்களின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அற்புத மனிதர்களில் ஒருவர் ரஜினி!