மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

புதுடெல்லி
கங்கை நதியை தூய்மைப்படுத்த  20 மறுசுழற்சிமுறை மையங்கள் அமைக்கப்படும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வாழும் கலை அமைப்பின் உலக கலாசாரத் திருவிழாவில்  அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாம் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறோம். நீர்வழிகளை மேம்படுத்தி வரும் அதேவேளையில் சுற்றுச் சூழலை பாதுகப்பதையும்,  மாசுபாடுகளை குறைப்பதையும்  முக்கியமாகச் செய்துவருகிறோம். கங்கை நதி மக்களின் உணர்வுப்பூர்வமான ஒன்று. கங்கையை சுத்தப்படுத்தும் மிகப்பெரும் திட்டப்பணிகளை முன்னரே துவக்கி விட்டோம். கங்கை நதி  முழுவதும்  20 நீர் சுழற்சி மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு மறுசுழற்சிமுறை மூலம் சுத்தப்படுத்தப்படும் தண்ணீர்  தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும். சுற்றுச்சூழல் விவகாரம் என்பது மிக முக்கியமானது. சுற்றுச்சூழல் மேம்பாடு தொடர்பாக பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகள் செயல்படுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
வறுமையை ஒழிப்பதுதான் நம் முக்கிய குறிக்கோள். அதற்காக ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்ப்டும். நாடு முழுவதுமுள்ள உள்ள 111 நதிகளின் நீர்வழிப்பாதைகள் அதிரடி நடவடிக்கை மூலம் புனரமைக்கப்படும். இதனால் நாடுமுழுவதுமுள்ள ஆறுகளின் 35 ஆயிரம் கி.மீ. நீர்வழிப்பாதைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும்.
தரமான நீர்வழிப்பாதைகளை அமைத்த்விட்டால், போக்குவரத்தினால் உருவாக்கப்படும் மாசுகள் குறைக்கப்படும். சரக்கு கட்டணச் செலவும் பெருமளவு குறையும்.
கழிவுகளிலிருந்து உருவாக்கும் மறுசுழற்சி திட்ட்த்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சாலைகள் அமைக்க 8 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெயை நாம் இறக்குமதி செய்கிறோம். இதனை குறைக்கும் வகையில் மாற்று  வாகன எரிபொருள்கள் உபயோகிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
நாக்பூரில் மட்டும் 150 பயோ சி.என்.ஜி.பேருந்துகளும், எத்தனாலில் இயங்கும் 50 பேருந்துகளும் இயக்க அரசு முடிவு செய்துள்ளது.  இன்னும் இரண்டு ஆண்டுகளில் டெல்லியில் 50 சதவீத மாசுபாட்டினை குறைப்பதற்காக பெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அறிவைக்கொண்டு பொருள் சேர்ப்போம்; அதேபோள் பயன்படுத்தப்பட்ட பொருளைக் கொண்டும் புதிய பொருள்களை மீள் உருவாக்கம் செய்வோம். இந்த இரு திட்டங்களாலும் மக்களுக்கு நிலையான வாழ்க்கை கிட்டும்.தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைப்பதற்காக 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் ஆண்டு தோறும் 5 லட்சம் சாலைவிபத்துகள் நடைபெறுகின்றன. இதில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழப்புக்கு உள்ளாகின்றனர். 3 லட்சம் பேர் தங்கள் உடல் உறுப்புகளை இழக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.