iaf-women-2-94_647_030916084302
இந்திய விமானப் படை தலைமை  அதிகாரி அருப் ராகா அவர்கள்  கடந்த எட்டாம் தேதி , நாட்டு மக்களுக்கு சர்வதேச மகளிர் தின சிறப்புச் செய்தியாக  “அவானி சதுர்வேதி , மோஹனா சிங் மற்றும் பாவனா காந்த் எனும் மூன்று பெண்கள் உட்பட 37 பழகுனர்களும் அடுத்த வருட ஜூன் மாத இறுதியில் போர் விமான ஓட்டுனிகளாக நியமிக்கப் படுவார்கள்” என அறிவித்தார்.
இந்த இளம் விமான ஓட்டுனர்கள்  அனைவரும் பிடார் அல்லது கலைக்குண்டா  விமானத்  தலத்தில் பணியமர்த்தப் பட்டு இடை நிலை போர் விமானப் பயிற்சியில் ஈடுபட்டு, குறிப்பாக போர் தந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் குறித்த  நுட்பங்களை ஒரு வருட காலத்தில்  கற்றுத் தேர்ந்து  உயர் ரக  மற்றும் நடுத்தர போர் விமானங்களை இயக்கும்  வல்லமையைப் பெறுவார்கள் என எதிர் பார்க்கப் படுகின்றது.
இதன் பின்னணி விவரம்:
தெலுங்கானாவில் உள்ள  ஹைதராபாத்தில்  இருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துண்டிகல் விமானப் படை பயிற்சி மையத்தில் பயிற்சியில் சேர்ந்த 120 பழகுனர்களில் இந்த மூன்று பெண்கள் உட்பட 37 பேர் போர் விமான பயிற்சிக்கு தேர்வாகியுள்ளனர். எஞ்சிய மற்றவர்கள் ஹெலிகாப்டர் மற்றும் போக்குவரத்து விமானங்கள் பயிற்சிக்கு தகுந்தவர்களாக தேர்வுசெய்யப் பட்டனர்.
இம்மூன்று பெண்கள் உட்பட 37 பேரும் முதல் அடிப்படை பயிற்சியை சிறப்பாக முடித்து ,  ஹைதராபாத் அருகிலுள்ள ஹக்கிம்பெட்  விமானப் படை பயிற்சி முகாமில் இரண்டாம் நிலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் . எஞ்சியுள்ள பயிற்சியில் போர் விமான சிக்கல்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக் கொண்ட பிறகு  2017 ஆண்டில் முழுத் தகுதிபெற்ற போர் விமான ஓட்டுனிகளாக களமிறங்கி கலக்கப் போகின்றனர்  எனும் செய்தி பெண்  சமத்துவ போராளிகளுக்கு உற்சாகம் அளிக்கும் செய்தியாகும் .
தேர்வாகியுள்ள  மூன்று போர்விமான ஓட்டுனி பழகுனர்களில் ஒருவரான மோகனா இதுகுறித்து  கூறுகையில் ” விமானப் படையில் பணியாற்றிய என் தாத்தா மற்றும் தந்தையின் வழியில் தாமும் இந்திய விமானப் படையில் சேர்ந்து போர் விமான ஓட்டுனியாக வேண்டும் என்ற கனவு சிறுவயது முதலே துளிர்விட்டதாகவும், அந்த கனவு  தற்பொழுது நனவாகியுள்ளது மட்டற்ற மகிழ்ச்சியை தருவதாகவும் இந்த  கிடைத்துள்ள சிறப்பு கெளரவம் கர்வமாக மாறாமல் பார்த்துக் கொள்வதில்  கவனமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மோகனாவின் தந்தை  இந்திய விமானப் படையில், குஜராத்தில் உள்ள வடடோராவில்  இடைநிலைப் பதவியான ஆணைப் பத்திர அதிகாரியாக  பணிபுரிந்து வருகின்றார் என்பது குறிப்பிட தக்கது.
மற்றொரு போர்விமான ஓட்டுனி பழகுனர் அவனி கூறுகையில் ” இந்திய விமானப் படை பணி  என்பது வீர சாகசங்கள்  நிறைந்த வாழ்க்கை . ஒரு நாட்டின் விமானப் படையின் பலம் அதன்  போர் விமானங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப் படுவதால் , தாங்கள் மூவரும் மிகுந்த உற்சாகவெள்ளத்தில் மிதக்கிறோம் ” எனத்  தெரிவித்தார் . அவனியின் மூத்த சகோதரரும் இந்திய விமானப் படையில் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்  தகுந்தது.
அவானி சதுர்வேதி , மோஹனா சிங் மற்றும் பாவனா காந்த் எனும் மூன்று பெண்கள் உட்பட  120 பேருக்கு முதல் நிலை பயிற்சி அளித்த பயிற்சியாளர் நினைவுகூர்கையில் ” ஆறுமாத பயிற்சி  காலத்தில் இந்தப் பெண்கள்  அனைத்து  பயிற்சியிலும் மற்ற ஆண்களுக்கு இணையாக  சுவிஸ் பியாடல் PC -7 டர்போ-ப்ராப்  ரக விமானங்களை இலகுவாக கையாண்டனர் என்றும் அதனால் தான் இந்த மூன்று பெண்களும் போர் விமானப் ஓட்டுனியாக தேர்வாகி இரண்டாம் நிலைப் பயிற்சியில் தற்பொழுது ஈடுபட்டுள்ளனர்  என்றும்   பாராட்டினார்.
அவானி சதுர்வேதி , மோஹனா சிங் மற்றும் பாவனா காந்த் ஆகிய மூவரும் ஒலி தடையை உடைத்தெறிய  ஆர்வமாக உளளனர் ..
ஆம் . இம்மூன்று பெண்களும்  கூடிய விரைவில் ஒலியை விட  அதிவேகமாக பயணிக்க போகிறார்கள் .
இந்த கல்பனா சாவ்லாக்கள் விரைவில் போர் விமானங்களான சூகோய்-30MKIs மற்றும்  மிராஜ்-2000s போன்ற  அச்சுறுத்தும் அதிவிரைவு போர் விமானங்களை தம்முடைய கட்டளைகளுக்கேற்ப இயக்கி  சுப்ரமணிய பாரதியின் கவிதை  வரிகளான “” பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி. “
 என்பதை  நனவாக்கப் போகின்றனர்.
இம்மூன்று பெண்கள் கடக்கப் போவது ஒலித்தடைகளை  மட்டுமல்ல ..   பெண்களை முக்கிய போர் பொறுப்புகளில் இருந்து விலக்கி  வைக்கப் பட்டிருந்த  பாலின பேதத்தையும்சேர்த்து இப்பெண்மணிகள் கடக்கப் போகின்றனர் .
மேலும் இவர்கள் மூவரும் முதல் போர் விமான பெண் ஓட்டுனி எனும் வரலாற்றினை படைக்க உள்ளனர் . சமீபத்திய அரசியல் சூழ்நிலையில்  மத அடிப்படைவாதிகளால் ஓங்கி ஒலிக்கும்  “பெண்கள்   குழந்தைபெற்றுக் கொடுக்கும்  இயந்திரமாகவும் , இயற்கையில் குடும்ப பொறுப்பை சுமக்கும் வரம் பெற்றவர்கள் ”  என்பனப் போன்ற கருத்துக்களையும் , பெண்களை   சாதியை காக்கும் கருவியாகவும் கருதும் பிற்போக்குவாதிகளின்  வெற்றுக் கூச்சல்களுக்கு , இவர்களின் சாதனைப் பயணம் தக்க பதிலடியாக அமையும் என்றால் அது மிகையாகாது.
இம்மூவரும்  “பெருமையுடன் விண்ணைத் தொடுவோம்”  எனும்   இந்திய விமானப் படையின் குறிக்கோளுக்கு ஒத்தாக   “அனைத்து பெண்களும் அரிய நெடும்   கனவுகளை நோக்கி பயணிக்க வேண்டும் ” என  ஒருமித்து கூறுகின்றனர்.
இதன் மூலம் இந்திய ராணுவத்தின் முந்தைய நிலைப்பாடான ” ஒரு போர் விமான ஓட்டுனியை   தயார் செய்ய 15 கோடி செலவு செய்யப் படுவதாலும் பெண்கள் திருமணம்  மற்றும் குழந்தைப் பெற்ற பின்  இந்த சாகச வேளையில் முழுக் கவனம் செலுத்த முடியாது எனும் பழமைவாத கருத்தினை  மாற்றிக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்  தக்கது
இம்மூன்று பெண்களை போர் விமான் ஓட்டுனிகளாக  தேர்வு செய்வதன் மூலம் உலகின் நான்காம் பெரிய விமானப் படையான  இந்திய ராணுவம் , பெண்களுக்கு போர் விமானி வாய்ப்பளிக்கும்  நாடுகளான அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரேல் துருக்கி மற்றும் பாகிஸ்தானுக்கு இணையான தகுதியை பெறுகின்றது என்பது பெருமைக்குரியது .