terrorists-finance1

ன்று கோலாலம்பூரில் ” நிதி தொடர்புகளை துண்டிப்போம். ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை அடியோடு ஒழிப்போம். அதன் தலைமையை வேட்டையாடி கொல்வோம்” என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

இராக்கிலும், சிரியாவிலும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலப்பரப்பில் ஒரு “கேலிஃபேட்” ஆட்சியை ( இஸ்லாமியப் புனித அரசு) நடத்துவதாக கூறிக்கொள்கிறது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புதான் உலகின் மிகப் பணக்கார தீவிரவாதக்குழுவாக கருதப்படுகிறது.

சரி, இன்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு எப்படித்தான் இப்படி கொள்ளை கொள்ளையாக பணம் வருகிறது?

நன்கொடை

குறிப்பாக சௌதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகளிலும் பிற நாடுகளிலும் உள்ள செல்வந்த இசுலாமியர்களும் இஸ்லாமிய அறக்கட்டளைகளும்தான் முக்கிய கொடையாளிகள்.

இஸ்லாம் மதத்தின் சுன்னி பிரிவைச் சேர்ந்த இந்த கொடையாளிகளின் நோக்கம், சிரியாவின் அதிபர் அசாத்தை பதவியிலிருந்து இறக்குவதே. ஏனென்றால் அதிபர் அசாத் இஸ்லாமின் அலாவைட் என்ற பிரிவைச் சேர்ந்தவர்

எண்ணெய்

கடந்த 2014ல் மட்டும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம், வாரம் ஒன்றுக்கு பல மிலியன் டாலர்கள் வரை சம்பாதித்திருக்கும் என்று அமெரிக்க நிதித்துறை கணித்திருக்கிறது. மொத்தம் 100 மிலியன் டாலர்கள் வரை சம்பாதித்திருக்கும். இந்த வருமானம் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பல பொருட்களை உள்ளூர் தரகர்களுக்கு விற்றதில் வந்த வருமானம். இந்த பொருட்களை, தரகர்கள் துருக்கி, இரான் அல்லது சிரியா அரசுக்குக் கடத்தி விற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் மேற்கத்திய படைகள் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல்கள் நடத்திய பிறகு, இந்த வருவாய் குறைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆள்கடத்தல்

மனிதர்களைக் கடத்துவதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறது ஐ.எஸ். அமைப்பு. இதற்காக “உளவு அமைப்பு” என்ற பெயரில் தனி துறையே வைத்திருக்கிறது. சிரியாவின் எல்லைக்குள் வெளிநாட்டு செய்தியாளர்கள் வந்துவிட்டால், அவர்களை கண்காணித்து கடத்துவதே இந்த அமைப்பின் பிரதான வேலை. மேலும் முக்கிய பிரமுகர்கள், செல்வந்தர்களை கடத்துவதும் உப தொழில்.

வாயைப் பிளக்காதீர்கள்..

2014ம் ஆண்டில் ஆட்கடத்தல்கள் மட்டுமே ஐ.எஸ். சம்பீதித்தது 20 மில்லியன் டாலர்களுக்கும் மேல்!

கட்டாய வரி

ஐ.எஸ் அமைப்புின் ஆதிக்கம் நிலவும் பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். இவர்களை மிரட்டி மாதா மாதம் “வரி” வசூலிக்கிறது. இந்தத் தொகையே பல மிலியன் டாலர்கள் ஆகும்.. அதாவது மாதத்துக்கு!

தவிர தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதி வழியாக செல்பவர்கள் அல்லது இங்கு வந்து தற்காலிமாக பணியாற்றுபவர்களுக்கும் வரி வசூலிக்கிறது இந்த அமைப்பு

கொள்ளை

வங்கிகளைக் கொள்ளையடிப்பது, புராதனப் பொருட்களை கடத்தி விற்பது, கால்நடைகள் மற்றும் பயிர்களைத் கொள்ளையடிப்பது ஆகியவை மூலமாகவும் ஐ.எஸ் வருமானம் பார்க்கிறது

சிறுபான்மையினர் வரி

தனது கட்டுப்பாட்டுக்குள் வாழும், மதச் சிறுபான்மையினர் மீது “ஜிஸ்யா” என்ற சிறப்பு வரியை ஐ.எஸ். விதித்திருக்கிறது. இதைக் கொடுத்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் உயிர் இருக்காது.

கடந்த வருடம் இராக்கிய நகரான மோசுல் நகரில் உள்ள பள்ளிவாசல்களில் ஒரு அறிவிப்பை ஐ.எஸ் ஒட்டியது.

.அதில்,” அனைத்து கிறித்தவர்களும் மதம் மாறவேண்டும், அல்லது ஜிஸியா என்ற சிறப்பு வரியைச் செலுத்த வேண்டும் அல்லது அவர்கள் அந்த நகரை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் மரணம்தான்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

.அடிமை வியாபாரம்

தாங்கள் கடத்திய பெண்களை பாலியல் அடிமைகளாக விற்று சம்பாதிக்கிறது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு. இந்த பாலியல் அடிமைகளில் பெரும்பாலானவர்கள் சிறுமிகள் என்பது இன்னும் கொடுமை.

இராக்கின் சில பகுதிகளை ஐ.எஸ். பிடித்தபோது அப் பகுதியில் இருந்த, யாஸிதி மதத்தைச் சேர்ந்த பெண்களை சிறைபிடித்து விற்பதை துவங்கியது

போதை மருந்து கடத்தல்

அரபு மற்றும் பல நாடுகளில் போதை மருந்தை பயன்படுத்தும் பெரும் செல்வந்தர்கள் உண்டு. அவர்கள் பலர் டீலர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு போதை மருந்து கடத்தி அதற்கான கமிஷனை பெருகிறது ஐ.எஸ். அமைப்பு.

இதுதான் அந்த அமைப்பு பணம் பெரும் வழிகள். இப்போது, இந்த பணம் வரும் வழிகளை அடைக்கப்போவதாக அமெரிக்க அதிபர் சொல்லியிருக்கிறார்.

நல்லதே நடக்கட்டும்!

 

  • யாழி