1

சென்னை:

மன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில், சவுதி அரேபியா எல்லையில் ஹராத் நகரில் நடந்த சண்டையில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் பலியாகிவிட்டார்கள்.

ஏமன் நாட்டில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ஹவுதி கிளர்ச்சியாளருக்கும் இடையே கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவத்திற்கு ஆதரவாக சவுதி அரேபியாவும் அதன் கூட்டு படையினரும் போரிட்டு வருகின்றன.

இந்த நிலையில் கிளர்ச்சியாளர்களுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு இயல்பு நிலை திரும்பியது. ஆனால் தற்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சவுதி எல்லையில் இருக்கும் ஹராத் நகரில், ஏமன் படையினரும், கிளர்ச்சியாளர்களும் இடையே கடுமையான போர் நடைபெறுகிறது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த போரில் இதுவரை சுமார் 75 பேர் பலியாகி இருக்கின்றனர். இதில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் முகமது, கள்ளக் குறிச்சியை சேர்ந்த அந்தோணி ஆகிய இருவர் பலியாகி உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்புல்லாணி ஒன்றியம் பிச்சாவலசை கிராமத்தை சேர்ந்த முகமது, பத்துஆண்டுக்கு முன்பே சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றவர். அவர் ஏமன் நாட்டின் எல்லையோர நகரமான நஜ்ரனில் தங்கி பணிபுரிந்து வந்தார்.

கடந்த ஜூன் மாதம் தான் சொந்த ஊருக்கு வந்து சவுதி திரும்பினார். அவருக்கு பரக்கத் நிஷா என்ற மனைவியும், வாஜித் என்ற மகனும், அஸ்மத் என்ற மகளும் உள்ளனர்.

குண்டு வீச்சில் பலியான கள்ளக்குறிச்சியை சேர்ந்த அந்தோணி பற்றிய முழு விவரம் இன்னும் தெரியவில்லை. போலீசார் அந்தோணி பற்றி அறிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலியான இரு தமிழர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.