விஜயகாந்த், பார்த்தசாரதி (ஃபைல் போட்டோ)
விஜயகாந்த், பார்த்தசாரதி (ஃபைல் போட்டோ)

சென்னை:
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கட்சியைச் சேர்ந்த விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பார்த்தசாரதியை சந்திக்கச் சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினார்.
பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய விஜயகாந்தை கண்டித்து அவரது வீட்டின் அருகே பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ பார்த்தசாரதி உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் பத்திரிகையாளர்களைத் தாக்கியதாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை சந்திக்க நேற்று புழல் சிறை வளாகத்துக்கு விஜயகாந்த் சென்றார். அவருடன் அவரது கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் பொன்னேரி சி.எச்.சேகர்,ஆரணி பாபு முருகவேல், திருச்சங்கோடு சம்பத் ஆகியோர் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர்.   ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து விஜயகாந்த்துடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. .