owaisi
ஏஐஎம் ஐ எம் கட்சித்தலைவர் அசாதுதீன் ஒவாய்சி

புதுடெல்லி
என் கழுத்தில் கத்தியை வைத்தாலும் பாரத் மாதா கி ஜே எனக் கூறமாட்டேன் என ஏஐஎம் ஐ எம் கட்சித்தலைவர் அசாதுதீன் ஒவாய்சி தெரிவித்துள்ளார்.
“நாட்டில் தேசியவாதத்தை மேம்படுத்துவதற்காக பாரத் மாதா கி ஜே பற்றி  அனைவருக்கும் சொல்லிக் கொடுக்கவேண்டும்.அப்போதுதான் நம் இந்தியாவின் பெருமைகளை வளரும் தலைமுறையினர் தெரிந்து கொள்வார்கள். இளைஞர்களுக்கு இதுபற்றி நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.”என டெல்லி ஜே.என்.யு.மாணவர்கள்  இந்தியாவிற்கு எதிராக முழக்கமிட்டதுபற்றி ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மார்ச் 3 ஆம் தேதி இவ்வாறு  விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஏஐஎம்ஐஎம் கட்சித்தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்றத் தொகுதியில் 3 முறை தொடர்ந்து எம்.பி.ஆக இருப்பவருமான அசாதுதீன் ஒவாய்சி  மகாராஷ்ட்ரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணிக்கூட்டத்தில்   உரையாற்றினார். அப்போது அவர் ,”பாரத் மாதா கி ஜே என ஏன் சொல்ல வேண்டும்? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒருவர் அப்படிச் சொல்லவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதா? மோகன் பகவத்தின் கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது. என் கழுத்தில் கத்தியை வைத்தாலும் ‘பாரத் மாதா கி ஜே’ எனச் சொல்லமாட்டேன். இதனால் மோகன் பகவத் என்னை என்ன செய்யப்போகிறீர்கள்? என ஆவேசமாய்ப் பேசினார்..
ஒவாய்சியின் இந்த ஆவேசப் பேச்சுக்கு  ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. சிவசேனா உள்ளிட்ட பலதரப்பிலுமிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி ஒவாய்சியிடம் செய்தியாளர்கள் கேட்ட்தற்கு, “என்  கருத்தில் நான் நிலையாக நிற்கிறேன். நான் அப்படிக் கூறியதில் எந்த தவறுகளோ, அரசமைப்புச் சட்டவிதி மீறல்களோ இல்லை எனக் கூறியுள்ளார்.