2
 நடிகர் சங்கத் தேர்தல் மாதிரியே, ஒளிப்பதிவாளர் சங்க தேர்தலும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. ‘சிகா’ என்கிற தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தேர்தல் வரும் பத்தாம் தேதி நடக்க இருக்கிறது. தேர்தல் நெருங்கியிருக்கும் வேளையில், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் மீது கடுமையான புகார்களை சொல்லியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள். 
அதற்கு முன் தேர்தல் கலவரத்தை..ஸாரி, நிலவரத்தைப் பார்த்துவிடுவோம். 
இந்த சங்கத்தின் தற்போததைய செயலாளரான ஜி.சிவா தலைமையில் ‘சேவை அணி’…  பி.சி.ஸ்ரீராம் தலைமையில் ‘நடுநிலை அணி’…  கே.வி.கன்னியப்பன் தலைமையில் ‘ஆண்டவர் அணி … என்று மூன்று அணிகள் இந்தத் தேர்தலில் மோதுகின்றன.

ஆண்டவர் அணியினர்
ஆண்டவர் அணியினர்

இதில் ஆண்டவர் அணியினர்தான் பி.சி.ஸ்ரீராம் மீது ஊழல் புகாரை தெரிவித்துள்ளார்கள்.
அவர்கள் சொல்வது இதுதான்:
 
“ஒரு படத்தில்கூட ஒளிப்பதிவாளராகப் ஜி.சிவா பணியாற்றவில்லை. ஆனால் இவர் சங்கத்தில் தொடர்ந்து தலைவராகவும், செயலாளராகவும் இருந்துவருகிறார்.  பல உறுப்பினர்களை எந்த விசாரணையும் இன்றி முறைகேடாக சங்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார். சங்க உறுப்பினர்களின் பெயரில் அவர்களுக்குத் தெரியாமலேயே கடன் பெற்று ஏமாற்றியிருக்கிறார்.  இது தெரிந்தவுடன் நாங்கள் கேட்டவுடன்,  தவறை ஒப்புக் கொண்டு அந்தப் பணத்தைத் திருப்பித் தருவதாக பத்திரத்தில் எழுதிக் கொடுத்தார்.
சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற சிகா அவார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதன் மூலம் சங்கத்துக்கு எத்தனை கோடி ரூபாய்  கிடைத்தது என்பதை சரியாக சொல்ல மறுக்கிறார்கள்.   தலைவரைக் கேட்டால் ஐந்தரை கோடி ரூபாய் என்கிறார். சிவாவோ மூன்றரை கோடி என்கிறார். சன் டிவியோ ஒன்றரை கோடிதான் சாட்டிலைட் உரிமைக்காக கொடுத்தோம் என்கிறது” என்று புகார் பட்டியல் வாசிக்கிறார்கள். 
சரி, இதில் பி.சி. ஸ்ரீராம் எங்கே வருகிறார்? 
இதோ அவர்களே சொல்கிறார்கள்:
“இந்த குளறுபடிகள் குறித்து பி.சி.ஸ்ரீராமிடம் கூறி, இந்த விஷயத்தில் தலையிட்டு சங்கத்தை மீட்க வரும்படி கோரிக்கை வைத்தோம். அவரோ, இந்த விஷயத்தில் தலையிட தனக்கு விருப்பமில்லை.  தனக்கு இதைவிட முக்கியமான வேலைகள் இருக்கிறது. ஒளிப்பதிவாள் சங்கம் எங்கே இருக்கிறது என்றுகூட எனக்குத் தெரியாது. என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லி எங்களை திருப்பி அனுப்பினார். 
ஆனால் தேர்தல் அறிவித்தவுடன் பல பிரபல ஒளிப்பதிவாளர்களை சேர்த்துக் கொண்டு ‘நடுநிலை அணி’ என்ற பெயரில்  போட்டியில் இறங்கியிருக்கிறார்.
மலேசியாவில் நடந்த ‘சிகா’ அவார்டு நிகழ்ச்சி தொடர்பான ஊழலில் யாருக்கெல்லாம் பங்கிருக்கிறது என்று நாங்கள் குற்றம் சாட்டினோமோ அவர்களையெல்லாம் தனது  அணியில் சேர்த்துக் கொண்டுடிருக்கிறார் பி.சி.ஸ்ரீராம். 
எங்களை ஆதரிக்க தயாராக இருக்கும் பல புதிய உறுப்பினர்களின் வாக்குகளை பிரித்து ஜி.சிவா அணியின் வெற்றிக்கு பி.சி.ஸ்ரீராம் வித்திடுகிறாரோ என்று சந்தேகிக்கிறோம். ஆக,  வகையில் ஊழலுக்கு ஒத்து ஊதுகிறார்!” என்கிறார்கள்  ஆவேசத்துடன்! 
ம்…  “ஊழல், வாக்குகளைப் பிரிக்கிறார்… “ என்று பொதுத்தேர்தல் லெவலுக்கு போகிறது ஒளிப்பதிவாளர் சங்க தேர்தல்!