கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் இசைத்துறையில் சாதித்ததற்காக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நூற்றாண்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கிறது.
மிக உயரிய விருது அது என்பதும், அந்த விருதுக்கு தகுதியானவர் இளையராஜா என்பதும் உண்மையே. அவரது இசைக்கு மயங்காதவர் யார்.
ஆனால் இந்த அளவுக்கு அங்கீகாரம் கிடைத்த பிறகாவது தான் இசை அமைத்ததாய் சொல்லும் சிம்பொனியை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஏனென்றால் இன்றுவரை இளையராஜாவின் இசையில் மர்மமாக இருப்பது அந்த சிம்பொனிதான்.
முதலில் சிம்பொனி என்றால் என்ன என்று பார்ப்போம்..
வெளிநாடுகளில், அந்தந்த காலத்திய இசைக் குழுவினர் வாசிப்பதற்காக, இசை அமைப்பாளர்கள் பலவிதமான இசைத் தொகுப்புகளை உருவாக்கினார்கள். இந்த இசைத் தொகுப்புகளுக்கு ‘சிம்பொனி’ என்று பெயர்.

சாஸ்திரிய முறைப்படி பழுதற்ற உயர்ந்த இசை வடிவங்களை, 15-ம் நூற்றாண்டில் இருந்தே விவால்டி, கேன்டல், பீதோவான் போன்ற இசை மேதைகள் உருவாக்கித் தந்தார்கள். இதுதான் சிம்பொனி.
சரி, இளையராஜா அமைத்த “சிம்பொனி” பற்றி பார்ப்போம். அதுவும் அவரது வாக்கின் மூலமாகவே…
ஆமாம், வெளிநாடு சென்று, “சிம்பொனி: அமைத்து திரும்பிய இளையராஜா தெரிவித்த கருத்து இதுதான்:
“என்னுடைய இசை திறமை பற்றி லண்டனில் உள்ள ‘ராயல் பில் ஹார்மனி’ என்ற இசைக்குழுவுக்கு தகவல் கிடைத்தது. இந்த இசைக்குழு, ராணி எலிசபெத்தின் ஆதரவில் இயங்குவதாகும்.
இந்த இசைக்குழுவினர் மைக்கேல் டவுன்எண்ட் என்பவரை சென்னைக்கு அனுப்பி, ஒரு படத்துக்கு நான் இசை அமைத்துக் கொண்டிருந்ததை நேரில் காணச் செய்தனர். எனது இசையை திறமை பற்றி புகழ்ந்து, லண்டனுக்கு தகவல் அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து, எனக்கு ‘ராயல் பில் ஹார்மனி’ இசைக்குழு அழைப்பு அனுப்பியது.
1993 ஜுலை 6-ந்தேதி அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், ‘வருகிற 19 முதல் 21-ந்தேதி வரை தங்கள் இசையை (சிம்பொனி) பதிவு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். எலிசபெத் ராணி அவர்களின் ஆதரவில், இது உலகப்புகழ் பெற்ற இசைக்குழுவாக இருந்தபோதிலும், ஆசியாவின் எந்த இசை அமைப்பாளரின் இசையையும் இதுவரை பதிவு செய்தது இல்லை. ராயல் பில்ஹர்மோனி இசைக்குழுவில் உள்ள அனைவரும் தங்கள் இசையை பதிவு செய்ய ஆவலோடு காத்திருக்கிறோம்’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இதைத்தொடர்ந்து லண்டன் சென்று நான் உருவாக்கிய சிம்பொனி இசையை பதிவு செய்தேன்” இதுதான் இளையராஜா சொன்னது.
இந்த சிம்பொனி பற்றி, ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருக்கிறார் இளையராஜா:
‘நான் படித்தவன் இல்லை. முறையாக சங்கீதம் கற்றவனும் இல்லை. எனக்குள் இருப்பது, என்னில் இருந்து மாறுபட்ட ஒன்றாகத் தோன்றுகிறது.
சில இசை உருவாக்கங்களை, படைப்புகளைச் செய்துவிட்டு, பிறகு நிதானமாக ஆராயும்போது, ‘இதைச் செய்தது நான்தானா?’ என்று தோன்றுகிறது. ‘இதைப் படைத்தது நானில்லையோ’ என்று தோன்றுகிறது. இதுபோல் அடிக்கடி ஏற்படுவதுண்டு.
இந்தப் பிறவியில் உருவான ஒன்றாகவும் இது தோன்றவில்லை. இது என்னுடையது இல்லையோ, இதை என்னால் சிந்திக்க முடியுமா என்றும் தோன்றுகிறது.’
இவ்வாறு இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
சரி, அந்த சிம்பொனி இசை ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை. எத்தனையோ வி.ஐ.பிக்களின் ரகசிய பேச்சுக்கள் கூட மீடியாவில், இணையத்தில் வந்துவிடுகிறதே. ஆனால் இந்த சிம்பொனி மட்டும் விக்கிலீக்ஸில்கூட லீக் ஆகவே இல்லையே…
இது பற்றி பிறகு இளையராஜா பேசுவதே இல்லையே, ஏன்?
இளையராஜா சிம்பொனிக்காக இசை அமைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காக அவர் வெளிநாட்டுக்கு சென்று வந்ததும் தெரியும்.. அந்த இசையமைப்பு பதிவானதை சன் டிவி இரண்டு வாரங்களுக்கு ஒளிபரப்பியது. ( இதை மறுஒளிபரப்பும் செய்தது!)
இது தொடர்பான பேட்டிகளில் இளையராஜாவே கலந்துகொண்டு தனது சிம்பொனி இசை பற்றி பேசினார். இது குறித்து எழுதாத தமிழ் இதழ்களே கிடையாது. மியூசிக் டைரக்டராயிருந்து மேஸ்ட்ரோ, பண்ணைப்புரத்திலிருந்து பிலடெல்பியாவரை, சினிமாவிலிருந்து சிம்பொனிவரை என்றெல்லாம் கட்டுரைகளும் தொடர்களும் வெளியாகின.
ஒரு முறை, வெளிநாட்டுக்காரர் ஒருவரை மேடையேற்றி கவுரவித்தார்கள். அது இளையராஜா தொடர்பான விழா. இந்த வெளிநாட்டுக்காரரை ஏன் பாராட்டுகிறார்கள் என்று விசாரித்தால்.. இளையராஜா அமைத்த சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவைக் கண்டக்ட் செய்தவர் இவர்தான் என்றார்கள்.
ஆக இளையராஜா சிம்பொனி அமைத்தார் என்று இந்த நாடு நம்புகிறது.
ஆனால் வெளியாகவில்லை. ஏன்?
இளையராஜா இசைமயைத்த திரைப்பாடல்கள் வெளியானாலே அவசர அவசரமாய் டவுண்லோட் செய்து கேட்கும் மக்களுக்கு, அவரது சிம்பொனியை ரசிக்க உரிமை இல்லையா?
ஒரு முறை இதுபற்றி அவரிடம் கேட்டபோது, (ஆனந்த விகடன் என்று நினைவு) “அதுபற்றி இப்போது பேசவேண்டாம்” என்று பதில் சொன்னார் இளையராஜா.
எப்போது பேசலாம் என்பதை அவர் சொல்லவில்லை.
எனவே மூடுமந்திரம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இது பற்றி இசை வல்லுநர்களிடம் கேட்டால், “சிம்பொனி இசைப்பது என்பது ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவது போல! இளையராஜா அமைத்த சிம்பொனி தேர்வில் அவர் தோல்வி அடைந்திருக்கலாம். அவரது இசையை சிம்பொனி என்று அங்கீகரிக்காமல் இருக்கலாம்” என்கிறார்கள்.
ஒருவேளை அதுதான் உண் மை என்றால், அதை வெளிப்படையாக இளையராஜா அறிவிக்கலாமே!
அல்லது சிம்பொனியை வெளியிடலாமே… இவ்வளவு பெரிய இசை மேதை வாழ்வில் இசை குறித்த மர்மம் தொடரலாமா?
இந்த நூற்றாண்டின் சிறந்த இசை மேதாயான இளையராஜா இனியாவது மர்மம் அவிழ்ப்பாரா?
– தமிழினி