இளையராஜா
இளையராஜா

ளையராஜாவிடம்  பீப் பாடல் பற்றி பத்திரிகையாளர் கேள்வி கேட்டது குறித்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது. பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் இளையராஜாவுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதோடு, புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கம், இளையராஜா மீது வழக்கு தொடுக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்,  தமிழ்நாடு, பாண்டிச்சேரி பத்திரிகை மீடியோ அசோசியேஷன் துணைச் செயலாளர் மனோ சவுந்தர் தனது கருத்துக்களை இங்கே தெரிவிக்கிறார்.

மனோ சவுந்தர்
மனோ சவுந்தர்

“இயற்கையின் ரெளத்திரத்தால் ஏற்பட்ட பேரிடரிலிருந்து அரசாங்கம் காப்பற்றவில்லை என்றாலும் தன்னார்வலர்களின் உதவிக்கரங்களால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், திடீரென்று திசை திருப்பிவிட்டது பீப் சாங். அது தொடர்பாக, இளையராஜாவிடம் தனியார் தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்ப, பீப் சாங் சர்ச்சையையே ஓரங்கட்டி ஓவர்டேக் பண்ணிக்கொண்டிருக்கிறது இளையராஜா வெர்சஸ் ஊடக சர்ச்சை!

‘ஊடகங்களுக்கு இடம் பொருள் ஏவல் தெரியாதா? பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண உதவி நிகழ்வில் இருக்கும் இளையராஜாவைப்பார்த்து, சிம்பு –அனிருத் பாடிய ’சீப்’பான பாடல் குறித்து இப்படி கேள்வி எழுப்பலாமா? இளையராஜா எவ்வளவு பெரிய இசை ஞானி? அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு தனியாப்போய் கேட்கவேண்டிதானே?’ என்று ஃபேஸ்புக் போராளிகள் பொங்கி எழுந்து பிளிறிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த இடத்தில் இளையராஜாவைப்பார்த்து சிம்பு-அனிருத்தின் பீப் சாங் குறித்து கேள்வி எழுப்புவதை தவித்திருக்கலாம் என்ற வாதம் சரிதான். காரணம், இளையராஜா அதற்கு முன் பேசும்போதும் அதற்கு முந்தைய நாட்களில் பேசும்போதும் தற்போது ஏற்பட்ட இயற்கை பேரிடர் கடவுள் கொடுத்த தண்டனை என்கிறார். அதையொட்டி, முதல் கேள்வியை நிருபர்கள் எழுப்பியிருக்கலாம். சரி, இன்றைக்கு கல்லூரி முடித்ததும் எந்தவிதமான அனுபவமுமில்லாமல் நேரடியாக 24 இண்ட் 7 சேனல்களில் வேலைக்கு சேரும் இளசுகளுக்கு என்ன மாதிரியான கேள்விகளை எந்தமாதிரியான சூழ்நிலைகளில் எழுப்பவேண்டும் என்ற முதிர்ச்சி இல்லாமல் இருப்பதே, இதுபோன்ற சர்ச்சைகளுக்குக்காரணம்.

பொதுவாக வார இதழ்கள், புலானாய்வு வாரமிருமுறை இதழ்கள், பெரும்பாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் ஃபோனிலோ அல்லது தனியாக நேரம் கேட்டோ கேள்வி எழுப்பி அதற்கான பதில்களை பிரசுரிப்பது வழக்கம். ஆனால், 24 இண்ட் 7 செய்திசேனல்கள் என்றைக்கு வர ஆரம்பித்ததோ நொடிக்கு நொடி பரபரப்பான செய்திகளை ஒளிபரப்பவேண்டிய கட்டாயத்துக்குள் மீடியாக்கள் தள்ளப்பட்டுவிட்டன. இந்தச்சூழலில், தன்னை கடவுளின் அவதாரம் போல நினைத்துக்கொண்டு வாழ்ந்துவரும் இளையராஜாவை அப்பாயிண்ட் வாங்கி சந்தித்துக் கேள்வி எழுப்ப வாரப்பத்திரிக்கைகளே மாதக்கணக்கில் காத்திருக்கவேண்டும். அப்படியிருக்க, 24 இண்ட் 7 சேனல்கள் என்ன செய்யும்?

அந்த இடத்தில் அப்படியொரு கேள்வி எழுப்பலாமா? எழுப்பியிருக்கக்கூடாதுதான். ஆனால், இசைத்துறையில் இருப்பதால் இளையராஜாவிட அப்படியொரு கேள்வியை கேட்க நேர்ந்திருக்கலாம்.

சரி, வயதில் மூத்த, அமைதியை விரும்பக்கூடிய, “ஞானி” இளையராஜா என்ன செய்திருக்கலாம்? “தம்பி… இங்க வந்து கேட்குற கேள்வியாப்பா இது? போப்பா…”என்று சொல்லி பக்குவமாய் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் தவிர்த்திருந்தால் சங்கீதத்தில் மட்டுமல்ல; இங்கிதத்திலும் இளையராஜா ஹீரோவாகியிருப்பார். ஆனால், அவர் செய்தது என்ன? நிருபரை பார்த்து உனக்கு அறிவு இருக்கா? உனக்கு அறிவு இருக்கா? என்று கோபத்தில் எகிறுகிறார். அந்த நிருபர் சிரித்துக்கொண்டே எனக்கு அறிவிருக்கிறதாலதானே கேட்கிறேன் என்கிறார். அதற்கு மறுபடியும் இளையராஜா, “உனக்கு அறிவு இருக்குங்கிறதை எந்த அறிவை வைத்து சொல்ற? உனக்கு கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கு?” என்று மேலும் எகிறி இங்கிதத்தில் தான் ஒரு ஜீரோ என்று நிரூபித்துவிட்டார்.

பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள்… ஏதோ ஒரு விழாவுக்காகவோ, அல்லது பயண நேரத்திலோ(விமானநிலையத்தில்) அல்லது மக்களிடம் செல்லும்போதோதான் பெரும்பாலும் பத்திரிகை சந்திப்பு நடக்கிறது. சில நேரங்களில் ஊடகத்தினரே தெரிந்துகொண்டு சென்றுவிடுவார்கள். பல நேரங்களில், பிரபலங்களின் பி.ஆர்.ஓக்களே ஊடகங்களுக்கு அழைப்பு கொடுத்துவிடுவார்கள். திருமணவிழாவுக்கு ஒரு அரசியல் தலைவர் வந்திருக்கிறார் என்றால் அந்த திருமண விழாவைப்பற்றி மட்டும்தானா கேள்வி எழுப்பமுடியும்? விமான நிலைய சந்திப்பின்போது விமானப் பயணம் எப்படியிருந்தது என்ற கேள்வியை மட்டுமா எழுப்பமுடியும்?

தவிர, இளையராஜாவிடம் கிரிக்கெட் மேட்ச் பற்றியோ, அதே தேதியில் பா.ஜ.கவினரால் ஆம் ஆத்மியினர் தாக்கப்பட்டது குறித்தோ, இன்னும் மழை வெள்ளம் வருமா என்று வானிலை அறிக்கை ரமணனிடம் கேட்கும் கேள்வியையோ கேட்கவில்லை. பாடல்-இசை என்கிற ஒட்டுமொத்த பெண்களையும் பாலியல் வன்முறை செய்த சிம்பு-அனிருத் குறித்துதான் கேள்வி கேட்கப்பட்டது. இசையில் ஞானி என்கிற முறையில் சிம்பு-அனிருத்தின் கீழ்த்தரமான செயலை கண்டித்திருக்கலாம். கண்டிக்கவிருப்பமில்லை என்றால் கேள்வியை தவிர்த்திருக்கலாம்.

ஊடகத்திற்கு கேள்வி கேட்க எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ அந்தளவுக்கு பதில் சொல்ல மறுக்கும் உரிமையும் இளையராஜாவுக்கு உண்டு. ஆனால், பீப் சாங்கைப்போல, ஊடக நிருபரிடம் வார்த்தை வன்முறையில் ஈடுபட்டிருப்பதுதான் இளையராஜாவை விமர்சிக்கவைக்கிறது.

இசை ஞானி… அவரைப்போய்? என்று ஃபேஸ்புக் போராளிகள் லைக் வாங்குவதற்காகவும் தங்களை போராளிகளாக காட்டிக்கொள்ளவும் நிருபர்களை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். அவருக்கு, ‘இசைஞானி’ என்ற பட்டம் கிடைத்தது எப்படி தெரியுமா? காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டப விழாவில் 1989-ல் முதலமைச்சராக இருந்த கலைஞர் பேசும்போது, தோற்றத்திலும் நடவடிக்கைகளிலும் பேச்சிலும் வேதாந்திபோல் காட்டிக்கொண்டதால் கலைஞருக்கே உரிய பாணியில் இளையராஜா இசையில் ‘ஞானி’போல் இருக்கிறார் என்று பேசினார். அதிலிருந்துதான் அவர் இசைஞானி என்று எல்லோராலும் போற்றப்பட்டார். பெரியார் படத்துக்கு இசை அமைக்க மறுத்தது. திருவாசகத்துக்கு இசை அமைக்க பணம் இல்லை என்றவர் தனது மகள் திருமண வேண்டுதலுக்காக மூகாம்பிகை கோயிலுக்கு நகைக்கடை ஓனரைப்போல.. கொத்தாக உண்டியலில் நகைபோட்டார். கம்யூனிசத்தை கேவலமாக பேசினார்.. இதெல்லாம் ஞானி செய்கிற வேலையா? இப்படி அவரது சொந்தவாழ்க்கையிலும் சொந்த நடவடிக்கைகளும் பல்வேறு விமர்சனங்கள் உண்டு. ஆனால், அதை அவரது பர்சனாலகவே கருதுகிறேன். இந்தச் சம்பவத்துக்குள் அதை தொடர்புபடுத்தவிரும்பவில்லை.

சமீபத்தில், எத்திராஜ் கல்லூரியில் நடந்த விழாவில், நடிகர் நாசர் “மனிதன்தான் இன்னொரு மனிதனுக்கு உதவமுடியும் என்று காட்டிவிட்டது மழை வெள்ளபாதிப்பு”என்று பேச… அதேமேடையில் நாசரின் கருத்தை மறுத்துப்பேசிக்கொண்டிருந்த இசைஞானி, நாசரை குடிக்க தண்ணீர் எடுத்துவரச்சொல்லிக் குடித்துவிட்டு, நாசரைப்பார்த்து ஏதோ சொல்லி சிரித்துவிட்டு பிறகு மைக்கில் பேசும்போது, ‘அவரிடம் ஜோக்கடித்துக்கடித்துக் கொண்டிருந்தேன். பகலிலே தண்ணீர் குடிப்பீர்களா?” என்று நாசரை குடித்துவிட்டுப் பேசுவதுபோல் கிண்டலடித்தார். இப்படி, அவரது பர்சனல் குறித்து நிறைய சொல்ல்லாம்.

ஆனால், இச்சம்பவத்துக்கு அது தொடர்பில்லாதது. ஆக, இளையராஜாவின் பாடல்களை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்… ஆனால், அவரைப்பற்றிய உண்மைத்தகவல்களை நம்மால் கேட்டுக்கொண்டிருக்க முடியாது. மழை வெள்ளப்பேரிடர் அவரை உதவி வெளியில் கொண்டுவந்திருக்கிறது. அவர் அந்த நல்லதை செய்துவிட்டுப்போகட்டும்! நமக்கு அந்த பெருந்தன்மை இருக்கிறது!”