raamanna

இலங்கை சென்று, இரண்டு நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பியிருந்த சுகன், இன்று என்னை சந்திக்க வந்திருந்தார். இலங்கை அரசியலையும் ஆழ்ந்து கவனிப்பவர். சிங்களர் கட்சிகள், தமிழர் கட்சிகள் என்று பலதரப்பட்டவர்களிடமும் சுமுகமாய் பழகுபவர்.

அவரைப் பார்த்தவுடனே, “சரியான நேரத்துல வந்திருக்கீங்க… பரபரப்பாக விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது இலங்கை பாராளுமன்ற தேர்தல். தேர்தல் முடிவும் முழுமையாக வெளியாகிவிட்ட இந்த நேரத்தில், பரபர விறுவிறு இல்லாமல், கொஞ்சம் நிதானமாக முடிவுகளை அலசலாமே. இந்த தேர்தல் முடிவால் அங்கு வாழும் தமிழரின் நிலையில் என்னவிதமான மாற்றங்கள், ஏற்றங்கள் ஏற்படும்.. விரிவாகச் சொல்லுங்களேன்” என்றேன்.

“வந்த உடனே தகவல்களைப் பிடுங்கணுமா…” என்று சிரித்தபடியே முறைத்தா். (அவர் அப்படித்தான்!)

பிறகு விரிவாக பேச ஆரம்பித்தார்:

“முதலில் இலங்கை தேர்தல் முறை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அங்கு பாராளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உண்டு. இவற்றில் 196 இடங்கள் மட்டுமே நேரடியாக மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க முடியும். மீதமுள்ள 29 இடங்கள், தேர்தலில் கட்சிகள் பெறுகிற ஓட்டுகளின் விகிதாச்சார அடிப்படையிலும் நிரப்பப்படும்.

இந்தத் தேர்தலில் 21 அரசியல் கட்சிகள் சார்பில் மொத்தம் 6 ஆயிரத்து 151 வேட்பாளர்களும், சுயேச்சையாக 2 ஆயிரத்து 498 வேட்பாளர்களும் போட்டியிட்டார்கள்.

ranil-rajapakshe-election-result

ரணில் விக்ரமசிங்கே

பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் ஏதுமின்றி, அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்தது. ஆனால் முடிவு, பல களேபாரங்களுக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறது” என்று சஸ்பென்ஸ் வைத்தார் சுகன்.

“இதிலுமா சஸ்பென்ஸ்.. “ என்று நான் கோபப்பட… ஆரம்பித்தார் சுகன்:

“113 இடங்களை பெறுகிற கட்சிதான் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியும். அதிபட்ச இடங்களில் வெற்றி பெற்ற ரணிலின் ஐக்கிய தேசியகட்சி கூட்டணியே 93 இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. முன்னாள் அதிபர் ராஜபக்சே, தற்போதைய அதிபர் சிறிசேனா ஆகியோரின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி 83 இடங்களை பெற்றுள்ளது. கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு 11 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு 9 இடங்களும்,கிடைக்கும். இந்த இடங்களுடன் சேர்த்து ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு மொத்தம் 104 இடங்களும், ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு 92 இடங்களும் கிடைக்கும்.

ராஜபக்சே, தனது தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நிலையில் ரணில் ஆட்சி அமைது உறுதியாகிவிட்டது. பெரும்பான்மை பெற ரணிலுக்கு ஒன்பது இடங்களே தேவை.

அவருக்கு வடக்கு கிழக்கு பகுதியில் பெருவெற்றி பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளிக்கும் என்று தெரிகிறது. இந்த கூட்டணி 14 இடங்களில் வென்றுள்ளது. தவிர கட்சி பெற்ற வாக்கு சதவிகித அடிப்படையில் மேலும் 2 இடங்களும் கிடைக்கும்.

ranil-rajapakshe-election-result1

மஹிந்த ராஜபக்சே

ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலை ஆதரித்து சில உரிமைகளையாவது தமிழர்க்கு பெற்று தர முனையலாம். ஆனால், கொழும்பு பக்கம் வேறொரு பேச்சு ஓடுகிறது. ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கட்சி உறுப்பினர்கள் பலர், கட்சி தாவி ரணிலை ஆதரிக்க தயாராக இருக்கிறார்களாம். (அங்கு கட்சி தாவல் தடை சட்டம் கிடையாது).

ஆகவே முழுதும் சிங்கள எம்.பிக்களின் ஆதரவுடன் ரணில் பிரதமரானால் தமிழரின் கோரிக்கை என்ன ஆகும் என்பது சந்தேகமே!” என்றார் சுகன்.

“ஓ… வடக்கு கிழக்கு பகுதி வெற்றி தோல்வி பற்றி சொல்லுங்கள்..” என்றேன்.

“ஒரு நாடு இரு தேசம்” என்ற கொள்கை முழக்கத்தோடு போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் தமிழ்தேசியம், சுய நிர்ணய உரிமை என்ற முழக்கங்களோடு தேர்தலைச் சந்தித்தவர்கள்.

சம்பந்தம் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ranil-rajapakshe-election-result2

சம்பந்தம்

இலங்கையின் வடக்கும், கிழக்கும் தமிழர்களின் பூர்வீக நாடு. அந்தவகையில் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுடைய உரிமைகளையும், தனித்தன்மையைக் காத்து உரிய அதிகாரங்களை பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதி அளித்தனர். அவர்கள்தான் பெரு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இந்த தேர்தலிலும் ராஜபக்‌ஷே தோல்வியடைந்தது ஈழ மக்களிடையே ஒருவித ஆறுதலை தந்துள்ளது. ஆனாலும் என்றாலும், 2010லிருந்து முள்ளிவாய்கால் கொடூரங்கள் பற்றி சுதந்திரமான சர்வதேச விசாரணை நடக்குமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஏனென்றால் ரணிலும் ராஜபக்‌ஷேவை விட்டுக்கொடுக்க மாட்டார்.

ரணில் விக்ரமசிங்கே பல உறுதிகள் தமிழர்களுக்கு வழங்கி, கடந்த தேர்தலில் வெற்றிபெற்றார். ஆனால் தான் கொடுத்த உறுதிமொழிகளைக் காப்பாற்றவில்லை என்பதுதான் கடந்தகால உண்மை.

அது மட்டுமல்ல சந்திரிகா குமாரதுங்கா ஆட்சியில், தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். பெரிய அளவில் உரிமைகளைத் தராத அந்தத் திட்டத்தையே ரணில் ஏற்றுக்கொள்ளவில்லை. பாராளுமன்றத்திலேயே தீர்மான நகலை கிழித்தெறிந்தார். ஆகவே அவரது நடவடிக்கை எப்படி இருக்கும் என்று சொல்லமுடியாது.

ranil-rajapakshe-election-result3

கஜேந்திர குமார்

அதே போல, தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்கு, பொதுவாக்கெடுப்பு கோரிக்கையும் நிறைவேறுமா என்ற சந்தேகமும் தொடர்கிறது.

இன்னொரு முக்கியமான விசயம், வடக்கு கிழக்கு பகுதியில் தமிழர்களுடைய நிலங்களில் பெரும்பகுதியை சிங்களர்களை சிங்களர்கள் அபகரித்துக்கொண்டார்கள் அல்லவா.. இது பற்றி நீதிமன்றம் சென்றும் தீர்வு கிடைக்கவில்லை. இதுநாள் வரை, நிலங்களை உரிய தமிழர்களிடம் ஒப்படைக்கவில்லை. இந்த விவகாரத்திலும் மைத்ரி சிறிசேனாவும், ரணிலும் அக்கறை செலுத்துவார்களா என்பதும் போகப்போகத்தான் தெரியும்.

இந்த நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களும், தன்னாட்சி வழங்குவது பற்றி இவர்கள் சிந்திப்பார்களா என்பதே சந்தேகம்தான்” என்ற சுகன், “இந்தத் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு, சில இடங்களாவது மக்கள் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் இந்தத் தேர்தல் முடிவு… ஈழம், தன்னுரிமை ஆகிய கோரிக்கைகளை வெளிப்படுத்தவில்லை என்பது உண்மை” என்று சுகன் சொல்லி முடிக்கவும், டீ பையன் டீ கொண்டுவரவும் சரியாக இருந்தது.