இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I : பேராசியர் ராஜன் ஹூல்

Must read

இலங்கை இனச்சிக்கலின் வரலாறு குறித்து,  இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் ராஜன் ஹூல் எழுதும் கட்டுரைத் தொடர் கொழும்பு டெலிகிராஃப் மற்றும் ஐலண்ட் நாளேடுகளில் வெளியாகிறது.  அதன் மொழிபெயர்ப்பை வெளியிட ராஜன் அனுமதித்திருக்கிறார்.
அக் கட்டுரைத் தொடரின் முதல் பாகம் இது:
 Jaffna_College
இனப் பிரச்சினைக்கு இன ரீதியான தீர்வு காண்பது ஆபத்தாக முடியும் என்றார் ஹாண்டி பேரின்பநாயகம். (செப்.18,1947)
இன அடையாளத்தைவிட நாமனைவரும் மனிதர்களே என்ற புரிதல் அவசியம் என்கிறார் லக்ஸ்ரீ ஃபெர்னாண்டோ அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில்.
சுயநிர்ணய உரிமை என்பது கருத்தியல் கோணத்தில் எழுப்பப்படக்கூடாது ஆனால் அத்தகைய உரிமை பெறுவதால் சமூகம் முன்னேறமுடியும் என்ற சாத்தியக்கூறு இருக்குமாயின், அவ்வாறு செய்யலாம் எனவும் ஃபெர்னாண்டோ குறிப்பிடுகிறார்.
ஆனால் சுய நிர்ணய உரிமை வழியேதான் இலங்கைத் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழமுடியும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
நாடு விடுதலை பெற்ற 1948லேயே மலையகத் தமிழர்கள் இனத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டார்கள். அந்த சோகம் தொடர்ந்திருக்கிறது. இந்த மோசமான வரலாறு முடிவுக்கு வர சுயநிர்ணய உரிமை அவசியம்.
நம் எல்லோருக்குமே பலவித அடையாளங்கள் உண்டுதான், இன, மொழி, மதம் என்று விரியும் அவை. ஆனால் அத்தகைய அடையாளங்களை எப்படி வரித்துக்கொள்கிறோம் என்பதையும் நோக்கவேண்டும்.
2,000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கும் விரவியிருந்த யூதர்கள் பாலஸ்தீனத்தில் உருவாக்கப்பட்டிருந்த அவர்கள் தேசத்திற்குச் செல்லாமல், மாறாக அவரவர் வாழ்ந்த நாடுகளிலேயே, ‘அந்நியர்’ மத்தியிலே தொடர்ந்து வசித்து, வளம் பெற்றனர்.
அதே போலவே 20ஆம் நூற்றாண்டிலும் கிழக்கு ஐரோப்பாவில் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளாகிய யூதர்கள், பாலஸ்தீனத்தில் உருவாக்கப்பட்டிருந்த, பிரிட்டனின் பாதுகாப்பிலிருந்த காலனியில் குடியேற விரும்பவில்லை, மாறாக சோஷலிச ஐரோப்பாவையே அவர்கள் உருவாக்க முயன்றனர், என சுட்டிக்காட்டுகிறார் கார்ல் காட்ஸ்கி. தங்கள் எதிர்காலம் குறித்து அவர்கள் சுயமாக எடுத்த முடிவு அது. அவ்வாறாக தன்னெழுச்சியாக தீர்மானித்துக்கொள்வதே சுயநிர்ணய உரிமையாகும்.
handy
இலங்கைத் தமிழர்கள்
1920களின் பிற்பகுதிவரையில் இலங்கைத் தமிழர்கள் சாதிகளால் பீடிக்கப்பட்ட ஒரு நிலவுடைமைச் சமுதாயமாகவே இருந்துவந்தனர். 1928 டொனமூர் ஆணையத்தின் சுயாட்சித் திட்ட்த்தின் விளைவாகவே தமிழர்களுக்கு அரசியல் அடையாளமும் உருவானது.
கூட்டுறவு இயக்கமும், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசும் அத்தகைய அடையாளம் வலுப்பெறக் காரணமாயிருந்தன.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் காம்ப்பெல், வட, கிழக்கு மாகாணங்களுக்குப் பொறுப்பாக ரகுநாதனை நியமித்தார்.
ரகுநாதனின் முயற்சியில் அமெரிக்க பாதிரியார் வார்ட் யாழ்ப்பாண கூட்டுறவு வங்கியின் முதல் தலைவராக 1929ல் பொறுப்பேற்றார்.
வார்ட் தலைமையில் இயங்கிய கிறித்தவ சமய அமைப்பு பள்ளிகள் பலவற்றை கிராமங்களில் நிறுவி, இலங்கையர்கள் ஆங்கிலம் கற்க உதவினர். அடித்தட்டு மக்களுக்கு இலவசக் கல்வி மட்டுமல்ல, இலவச உறைவிடமும் அளிக்கப்பட்டது
1924ல் தோன்றிய மாணவர் காங்கிரஸ் மீதும் அமெரிக்க மிஷனின் தாக்கம் இருந்தது. சமூக, பொருளாதார மேம்பாடு, பாரம்பரியக் கலைகள் மற்றும் இலக்கியத்தை மீட்டெடுத்தல், மற்றும் அரசியல் சுதந்திரம் உள்ளிட்டவையே அவ்வமைப்பின் முக்கிய நோக்கங்களாக பிரகடனம் செய்யப்பட்டது.
காந்தியத்தால் ஈர்க்கப்பட்ட யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர் காங்கிரசின் செயல்பாடுளை ஊக்குவித்தனர்.
(யாழ்ப்பாணக் கல்லூரி என்பது வட்டுக்கோட்டையில் ஒரு உயர்நிலைப் பள்ளிதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.)
”நான் யாழ்ப்பாணக் கல்லூரியில் சேர்ந்தபோதுதான் ஹாண்டி மாஸ்டர் (பேரின்பநாயகம்) மாணவர்கள் மனங்களில் புரட்சிகர எண்ணங்களை விதைத்துக்கொண்டிருந்தார். பழமைவாத ஆசிரியர்களுக்கோ ஹாண்டியின் அணுகுமுறை சற்றும் பிடிக்கவில்லை.
”அவர் தனக்கு உணவு பரிமாற தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த ஒருவரை வைத்துக்கொண்டார். பள்ளியில் அச்சமூக மாணவர்களை பிக்நெல் பாதிரியார் சேர்த்தபோது மேல் சாதி ஆசிரியர்கள் கல்லூரியிலிருந்தே விலகினர், ஹாண்டி. மட்டுமே அவருக்கு பக்கபலமாயிருந்தார். அம்மாணவர்களும் மற்றவர்களுடன் இணைந்து உண்ணும் உரிமையினையும் ஹாண்டி மாஸ்டர்தான் போராடி நிறுவினார். இவ்வாறு அவர் சமூக நீதிப் போராட்டத்தின் அடையாளமானார். அப்படித்தான் மாணவர் காங்கிரஸ் உருவானது. பின்னர் மாணவர் காங்கிரஸ் இளைஞர் காங்கிரசாகவும் ஆனது,” என்கிறார். அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான சுப்பிரமணியன்.
டொனமூர் சுயாட்சித் திட்டம் அமலானபோது, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோரும் மற்ற மாணவர்களுக்கு சமமாக அமரலாம் என்ற நிலை உருவானது. இதை எப்படி மேல் சாதியினர் ஏற்றுக்கொள்வார்கள்? மோதல்தான். மாணவர் காங்கிரஸ் ஒடுக்கப்பட்டோர் பக்கமே நின்றது.
கிறித்தவர்கள் தூண்டுதலில் செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது, விக்டோரியா கல்லூரி முதல்வர், பின்னாளில் சைவப் பெரியார் என அழைக்கப்பட்ட சிவபாதசுந்தரம், மாணவர் காங்கிரசின் ஆறாவது மாநாட்டிற்குத் தலைமை தாங்க அழைக்கப்பட்டார். அவரும் ஒத்துக்கொண்டார்.
மாநாட்டைக் குலைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை முறியடிக்கப்பட்டன, சாதிரீதியான ஒடுக்குமுறைகளைக் களைவது தங்களது முக்கிய குறிக்கோள், சமூக நீதி இல்லாமல் அரசியல் விடுதலை வெறும் கானல் நீரே என காங்கிரஸ் தெளிவாக அறிவித்தது.
தமிழர்களும் கிறித்தவர்களும் தோளோடு தோள் நின்று செயல்படத்துவங்கினர், மதச் சார்பின்மை ஆழமாக வேரூன்றியது. அதன் பிறகு எவரும் பகிரங்கமாக சமய சார்பு நிலைப்பாடு எடுப்பதில்லை.

ராஜன் ஹூல்
ராஜன் ஹூல்

இதே நேரத்தில் இளைஞர் காங்கிரசும், கூட்டுறவு இயக்கமும் இணைந்து அரசியல் விடுதலைக்கு அறைகூவல் விடுத்தன. ஒட்டு மொத்த தீவிற்கும் இவை முன்னோடியாகத் திகழ்ந்தன.
மேலே குறிப்பிட்ட ரகுநாதனின் முன்முயற்சியில் வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள மூலை எனும் சிற்றூரில் கூட்டுறவு மருத்துவமனை உருவானது. ஒரு மருத்துவரும் இரு கம்பண்டர்களும் இலவசமாகப் பணிபுரிந்தனர். அவர்கள் அர்ப்பணிப்பின் காரணமாக மருத்துவமனையின் புகழ் நாடெங்கும் பரவியது. மிகத் தொலைவிலிருந்த பருத்திமுனையிலிருந்து கூட பெண்கள் மகப்பேறுகாலத்தில் மூலைக்கே வந்தனர்.
இத்தகைய அமைப்புக்கள் வெறும் சமூகத் தொண்டோடு நின்றுவிடாமல் அரசியல் கல்வியையும் புகட்டின. சமூகத்தில் நெடுங்காலமாய் இருந்து வந்த அதிகார அமைப்புக்களைப் புறந்தள்ளி, புதிய அமைப்புக்கள்பால் தங்கள் கவனத்தைத் திருப்பவேண்டும், அவற்றை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என மக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.
அரசியல் தீர்வு என்ற பெயரில் இணைந்து வாழ்ந்து வரும் இனங்கள் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பாவிக்கக்கூடாது, இன அடிப்படையில் தீர்வையும் கோரக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
எந்த ஒரு சமூகமும் ஒரு கூட்டமைப்பாக இயங்கவேண்டும். அரசு எந்த முடிவையும் சமூகத்தின் மீது திணிக்கக்கூடாது, பரந்து பட்ட மக்களைக் கலந்தாலோசித்த பின்னரே எந்த சட்டமும் இயற்றப்படவேண்டும் என்பார் ஹெரால்ட் லாஸ்கி. இந்தப் பின்னணியில் இலங்கை இனச்சிக்கலின் வரலாற்றை நாம் ஆராயலாம்.
(மொழியாக்கம் – கானகன்)
 

More articles

Latest article