9

பொதுவாகவே சமீப காலமாக, நடுத்தர மற்றும்  மேல்மட்ட மக்களிடையே உறவுகளுக்குள் நெருக்கம் இல்லாமல் போய்விட்டது என்பது கண்கூடு. அது இந்த வெள்ளத்திலும் வெளிப்பட்டுள்ளது.

சென்னை பகுதியில் கூவம், அடையாறு கரையோரத்தில் வாழும் ஏழை மக்கள் தங்களது குடிசைகளை இழந்து அரசு நிவாரண முகாம்களில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

வாடகை அல்லது சொந்த வீடு மற்றும் ப்ளாட்கள் மற்றும்  நடுத்தர மற்றும் மேல்மட்ட மக்கள் பலர் இந்த வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக கீழ் ப்ளோரில் வசிப்பவர்கள் வெள்ளத்தில் சிக்கியதால் புகலிடம் தேடி தற்போது வேறு வீடுகளுக்குள் தங்கியிருக்கிறார்கள்.

இவர்களில் மிகப் பெரும்பாலோர் சென்னையிலேயே வசிக்கும்.. வெள்ள பாதிப்பில்லாத சகோதர சகோதரிகள் வீடுகளை புறக்கணித்து நண்பர்களது வீடுகளில் தஞ்சமடைந்துள்ளார்கள்.

நாம் சந்தித்த பலரும், “ என்னதான் இருந்தாலும் உறவினர்களிடம் உதவி கேட்டால் நாளை சொல்லிக்காண்பிப்பார்கள். அல்லது பதில் உதவிக்காக வந்து நிற்பார்கள்.  ஆனால் நண்பர்கள் அப்படி அல்ல” என்றார்கள்.

இன்னும் பலர், உறவும் வேண்டாம், நட்பும் வேண்டாம் என்று ஓட்டல்களை நாடி சென்றுவிட்டார்கள்.  கடுமையான வெள்ளபாதிப்புக்குள்ளாகியிருக்கும் வேளச்சேரி ஓட்டல் ஒன்றின் நிர்வாகியை சந்தித்து பேசினோம்.

அவர், “எங்கள் விடுதியிலும் கடும் பாதிப்புதான். குறிப்பிட்ட சில வகை உணவுகளைத்தான் வழங்க வருகிறோம். ஆனால் இந்த மழை சமயத்தில் ஓட்டல் அறைகள் பெரும்பாலும் காலியாக இருக்கும். ஆனால் இப்போது எண்பது சதவிகித அறைகளில் ஆட்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஓரிருவர் தவிர மற்றவர்கள், வெள்ளத்தால் தங்கள் வீட்டைவிட்டு வந்தவர்கள்” என்கிறார்.

உணவு விடுதியில் பணி புரியும் பெரியவர் ஒருவர், “உறவை விலக்கும் மனநிலை என்பது போய், உறவுகளை வெறுக்கும் மனநிலை மத்தியதர வர்க்கத்துக்கு வந்துவிட்டதையே இது உணர்த்துகிறது. உணவு என்பது உறவுக்கான விசயமாக முன்பு இருந்தது. இப்போது அது  கைக்கும் வாய்க்குமான விசயமாக ஆகிவிட்டது. ஆகவேதான் காசு கொடுத்தால் சாப்பாடு போடுகிறார்கள். உறவுகள் எதற்கு என்று இங்கு (உணவு விடுதி) வந்துவிடுகிறார்கள் பலர்” என்றார் வருத்தத்தோடு.

வெள்ள பாதிப்பைவிட இந்த மன பாதிப்பு இன்னும் வருத்தமளிக்கக்கூடியதது என்றே தோன்றுகிறது.