index
லால்பகதூர் சாஸ்திரி நினைவுநாள்
“ஜெய் ஜவான் ஜெய் கிஸான் ” முழக்கத்தை நம் நாட்டுக்கு அளித்த மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவு நாள் இன்று. (1966) விடுதலைப் போராட்ட வீரரான இவர், விடுதலைக்குப் பிறகு ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு வந்தார். இவர் பதவியேற்று அடுத்த ஆண்டே இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் போர் மூண்டது. அதில் இந்தியா வெற்றி பெற்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பின்னர் அதனை அமல் படுத்துவதில் இருந்த, இடைவிடாத பிரச்னைக்குத் தீர்வு காண சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் சோவியத் ஒன்றிய தலைவர் அலெக்சி கோசிசின் அவர்களால் தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்கள். ஜனவரி 10, 1966 ல் சாஸ்திரியும் கானும் தாஷ்கண்ட் சாற்றுதலில் கையொப்பமிட்டார்கள். அன்று இரவு, ரஷ்யப் பிரதமர் தந்த விருந்தில் கலந்து கொண்ட பிறகு, தன் அறைக்குத் திரும்பிய சாஸ்திரிக்கு இரவு ஒரு மணிக்கு மேல் இருமல், மார்வலி, மூச்சுத் திணறல் என்று ஆரம்பித்து உயிர் பிரிந்து விட்டது.. இவரே பதவியில் உள்ள போது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்திய பிரதமர் ஆவார். சாஸ்திரியின் உடலை சவப்பெட்டியில் ஏற்றி இந்தியா கொண்டுவர நடந்த ஏற்பாடுகளின் போது, கோஸிஜினும் அயூப்கானும் அந்தப் பெட்டியை விமானத்தில் ஏற்ற சுமந்து வந்தார்கள்!
 
indexd
 
கொடிகாத்த குமரன் நினைவு நாள்
இன்று, திருப்பூர் கொடிகாத்த குமரன் நினைவு நாள். (1932) ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த குமரன் நாட்டின் விடுதலைக்காக நடந்த சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றார். 1932ஆம் ஆண்டு நாடு முழுவதும் சட்ட மறுப்புப் போராட்டம் நடைபெற்றது. ஜனவரி 11ஆம் தேதி திருப்பூரில் மறியல் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கையில் கொடியுடன் குமரன் பேரணியில் சென்றார்.
அப்போது காவல் துறையினர் நடத்திய தடியடியில் குமரனின் மண்டை பிளந்தது. எனினும் கையில் இருந்த கொடியை கீழே விடாமல் ஏந்தியவாறு மயங்கிக் கீழே விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குமரன் அங்கு உயிரிழந்தார். இதனால் அவர் கொடி காத்த குமரன் என்று அழைக்கப்படுகிறார். அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழக அரசு திருப்பூரில் நினைவகம் ஒன்றை உருவாக்கி உள்ளது.
index
 
சாலை பாதுகாப்பு வாரம்
சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் வருடம் தோறும் ஜனவரி மாதம் 11 முதல் 17ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக அரசு கடைப்பிடிக்கப்படுகிறது. விபத்து இல்லா பயணத்தை உறுதி செய்யும் வகையில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு அவர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அவ்வப்போது பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களின் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வேகமாகச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க கண்காணிப்பு நிழற்படக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனாலும் மது பழக்கம் காரணமாகவே பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன என்று ஆய்வு கூறுகிறது.