inji_2532481f_2636818f

குண்டான அழகி அனுஷ்கா. அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது அம்மாவுக்கு ஆசையோ ஆசை. ஆனால் குண்டழகி அனுஷ்காவுக்கோ, எப்போதும் நொறுக்குத்தீனி தின்றுகொண்டே இருக்க வேண்டும் என்பதே ஆசை.

“தீனியை குறை.. அப்போதுதான் உடம்பு குறையும்.. மாப்பிள்ளையும் கிடைப்பான்” என்று புலம்பிக்கொண்டே இருக்கிறார் அம்மா.

அனுஷ்கா அது பற்றி கவலைப்படாமல், தின்பதிலேயே குறியாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் அம்மா ரொம்ப வருத்தப்பட.. சென்டிமெண்ட்டாக உருகிய அனுஷ்கா, தனது உடல் பருமனை குறைக்க ஆயத்தமாகிறார். அதில் வெற்றி கிடைத்ததா என்பததுதான் சொச்ச கதை!

திரை முழுக்க நிறைந்திருக்கிறார் அனுஷ்கா. தன் உருவத்தால் மட்டுமல்ல.. அசாத்திய நடிப்பாலும்தான்! “குண்டாக இருக்கிறாயே..” என்று அம்மா புலம்ப, அதை கவனிக்காததுபோல தீனிகளை காலி செய்வதும், அதே அம்மா மிகவும் வருத்தப்பட.. உடம்பை குறைச்சுக்காட்டறேன் என்று ஆக்ரோசத்துடன் சபதம் எடுப்பதும்.. அனுஷ்கா ஜொலிக்கிறார். சோகம், பாசம், ஆதங்கம், பொறாமை.. என அத்தனை உணர்ச்சிகளையும் எளிதாக வெளிக்காட்டுகிறது அனுஷ்காவின் குண்டு முகம்.

‘இத்தனை நாளா உன் பொண்ணுன்னு நினைச்சேன். இப்பதான் தெரியுது நான் பிரச்னை’ன்னு என ஊர்வசியிடம் அனுஷ்கா பேசும் காட்சியில் நெகிழ்கிறா்கள் ரசிகர்கள்.

கதாபாத்திரத்துக்கு ஏற்ப, எடையைக் கூட்டி குறைப்பது ஹீரோக்கள் மட்டுமே செய்யும் வேலை என்ற இருக்கும் நிலையில், தானும் எடை கூட்டி அசர வைத்திருக்கிறார் அனுஷ்கா. அதற்காகவே அவரைப்பாராட்டலாம்.

ஹீரோயின் ஆர்யா.. ஸாரி, ஹீரோ ஆர்யா! ஏதோ வந்துபோகிறார்! நண்பி அனுஷ்கா நடிக்கும் படம் என்பதால் ஒப்புக்கொண்டுவிட்டார் போலிருக்கிறது. மற்றபடி சொல்லிக்கொள்ளும்படியான வேடம் இல்லை!

வழக்கம்போலவே அசத்தியிருக்கிறார் ஊர்வசி. அதுவும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் அசத்தியிருக்கிறார்.

பிரகாஷ்ராஜ், மாஸ்டர் பரத், சோனல் சௌஹன் ஆகியோரும், ஆர்யா போல வந்து போகிறார்கள்.

மரகத மணியின் இசை சோபிக்கவில்லை. சைஸ் செக்ஸியா பாடம் மட்டும் பரவாயில்லை ரகம். நீரவ் ஷா ஒளிப்பதிவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

தெலுங்கில் சூப்பர் டூப்பர் இயக்குநராக அறியபட்ட பிரகாஷின் முதல் தமிழ்ப்படம்.

குண்டான பெண்ணின் மன உளைச்சலை வெளிப்படுத்தும்படியாக படம் எடுத்ததற்கு பாராட்டலாம். ஆனால் படத்தின் முதல்பாதி காமெடி கலாட்டாவாகவே போகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நல்ல கருத்தாக இருந்தாலும் சொல்லும் முறையும் (திரைக்கதை) முக்கியம் அல்லவா… பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!