ஆப்ரிக்காவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் யானைகள் அழிப்பு
ஆப்ரிக்காவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் யானைகள் அழிப்பு

வாஷிங்டன்:
ஆப்ரிக்கா நாடுகளில் யானைகளின் தந்தம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளதால், அங்கு யானைகளின் வாழ்க்கைக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
சட்ட விரோத வன உயிரின கடத்தலை தடுக்க டிஎன்ஏ ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞாணி சாமுவேல் வாசேர் ஒரு வாஷிங்டன் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசியதாவது:
மிகப்பெரிய யானை தந்த வணிகம் ஒரே இடத்தை குறிவைத்து நடந்து வருகிறது. குறிப்பாக ஆப்ரிக்காவில் இரண்டு மண்டலங்கள் இதற்கு இலக்காக உள்ளது. தான்சானியா காடுகளில் தான் அநியாயம் நடக்கிறது. சில அதிகார சக்திகள் சட்டவிரோதமாக நடக்கும் இந்த பல பில்லியன் டாலர் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையை மாற்ற சற்று கால தாமதம் ஆகும். 2006ம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட தந்தகளை ஆய்வு செய்தபோது, யானையை கொன்ற இடத்தில் இருந்து உடனடியாக தந்தங்களை நாட்டை விட்டு வெளியே கொண்டு சென்றுவிடுவது தெரியவந்துள்ளது. டிஎன்ஏ பரிசோதனையில் ஒரு யானையின் இரு தந்தங்கள் வெவ்வேறு கப்பல்களில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு கடத்தல் சம்பவங்களுக்கு பின்னார் ஒரே ஒரு டீலர் இருப்பது தெரியவந்துள்ளது.
ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றான கென்யாவின் கடற்கரை நகரமான மொம்பாசா மிகப்பெரிய இடைத் தங்கல் பகுதியாக விளங்குகிறது. இங்கிருந்து ஒன்று அல்லது இரண்டு டீலர்கள் மூலம் தான் அனைத்து தந்தகளும் பிற நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. டிஎன்ஏ ஆய்வு மூலம் தந்தம் கடத்தலை தடுக்க தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள பெரிய டீலரை பிடிக்க பாதை அமைக்கப்பட்டு விட்டது.
ஆண்டுதோறும் ஆப்ரிக்காவில் 50 ஆயிரம் யானைகள் வேட்டையாடப்படுகிறது. ஆப்ரிக்கா கண்டத்தில் தற்போது 4 லட்சத்து 50 ஆயிரம் யானைகள் இருப்பதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆயுதம், போதை பொருள், ஆள் கடத்தல் இந்த வரிசையில் சர்வதேச அளவிலான குற்ற நடவடிக்கையில் யானை தந்தம் 4வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவிலான சட்டவிரோத செயல்கள் மூலம் ஆண்டுதோறும் 20 பில்லியன் டாலர் வர்த்தகம் நடக்கிறது. இதில் தந்தம் வணிகம் மட்டும் 3 பில்லியன் டாலராகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சுற்றுசூழல் புலனாய்வு அமைப்பின் தலைவர் அலன் தொர்ர்டன் கூறுகையில், ‘‘தந்தம் கடத்தல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது. எனினும் அதை தடுக்க முடியவில்லை. இது அதிக சக்தி வாய்ந்ததாகவும், அதிக மதிப்புள்ளதாகவும் இருக்கிறது. தடுப்பதற்கு எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியை தான் சந்தித்துள்ளனன.
1989ம் ஆண்டு சர்வதேச வணிகம் மேற்கொள்ள தந்தத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 8 ஆண்டுகள் இந்த உத்தரவு அமலில் இருந்தபோது, ஆப்ரிக்கா நாடுகளின் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஜப்பான் அழுத்தம் காரணமாக 1997ம் ஆண்டில் இந்த தடை விலக்கப்பட்டதை தொடர்ந்து வேட்டை ஆரம்பமானது.
2008ம் ஆண்டில் தெற்கு ஆப்ரிக்காவை சேர்ந்த 3 நாடுகளில் இருந்து ஜப்பான், சீனாவுக்கு தந்தம் விற்பனை செய்ய சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டது.
இதன் பின்னர் அதிக அளவிலான யானைகள் வேட்டையாடப்பட்டன. சீனாவில் உலகின் 70 சதவீத தந்தங்களின் தேவை உள்ளது. ஆசிய நாடுகளில் இறக்குமதியாளர்களுடன் போராட டிஎன்ஏ ஆயுதத்தை பயன்படுத்த அரசியலில் ஸ்திரதன்மை இல்லை. இந்த பொறுப்பை ஆப்ரிக்கர்கள் மீது ஆசியா திணித்து விடுகிறது’’ என்றார்.