புதிய பகுதி: ஊடக குரல்
பலரது எண்ணங்களை, கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது ஊடகர்களின் பணி.   அந்த ஊடகரின் கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்தும் பகுதி இது.
ஊடகத்துறை மேல் அவர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட காரணம்,   இந்தத் துறையில் என்ன சாதிக்க விரும்புகிறார்கள், இன்றைய ஊடக நிலை போன்ற பல கேள்விகளுக்கு பதில் பெறுவதே நமது நோக்கம்.
இந்த பகுதியின் முதல் பேட்டியாக, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் (சீனியர் எடிட்டர்)  வேங்கடபிரகாஷ் அவர்களது பேட்டி வெளியானது.
அடுத்ததாக, இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் சிறப்புச் செய்தியாளராக பணிபுரியும் சுகிதா அவர்களின் பேட்டி  இன்று காலை வெளியானது. அதன் தொடர்ச்சி… 
1959509_777326112295870_2009890101_n
அச்சிதழ்களைவிட, தொ.கா. ஊடகம்தான் சிறப்பானதா?
அச்சு ஊடகங்களில் இருந்து தான் நான் காட்சி ஊடகத்திற்கு வந்தேன் ..ஆனாலும் எனக்கு இன்னும் அச்சு ஊடகத்தின் மீது உள்ள காதல் குறையவில்லை என்று சொல்லலாம் ..கடந்த 7 ஆண்டுகளாக எத்தனையோ நிகழ்ச்சிகளை பல மணிநேரம் தொடர் நேரலையில் எல்லாம் பேசி இருக்கிறேன் ..அதெல்லாம் காற்றோடு கரைந்து போய்விட்டது ..திரும்பி பார்க்கும் போது ஆவணமாக எதுவுமே இல்லை..
இணையங்களில் அதன் காணொளி காட்சி கிடைத்தாலும் நாளுக்கு நாள் புதியதாக வரும் போது அது எங்கோ ஒரு முளையில் ஒளிந்திருக்கும் . ஆனால் அச்சில் நம் செய்திக்கு ,கட்டுரைக்கு கீழே பெயரை பார்க்கும் போது ஏற்படும் அந்த பரவசத்திற்கு வார்த்தையே இல்லை ..அது நாம் வாழ்ந்த்தற்கான அடையாளம் ..நான் எழுதும் ஒரு வரிச் செய்தி முதல் புத்தகங்கள் வரை அவை அனைத்தும் எனக்கு பின்பும் என் இருத்தலை அடையாளப்படுத்தும் ..அதனால் அச்சு ஊடகத்திற்கு என்றைக்கும் வலிமை உண்டு.
1526374_718369998181697_1033723608_n
 
பெரும்பாலும் நிகழ்ச்சி நெறியாளர்கள் சிகப்பாகவே இருக்கிறார்களே… கறுப்பு என்றால் தாழ்வானது என்ற எண்ணம் ஊடகத்திலும் இருக்கிறதா?
நான் ஒரு போதும் அப்படி நினைத்ததில்லை ..90 களுக்கு முன்பு வேண்டும் என்றால் திரைப்படங்கள் தொடங்கி இப்படியான ஒரு நிலை இருந்திருக்கலாம் ..ஆனால் இன்று திறமைக்கு தான் முதல் மரியாதை .. அழகுப்படுத்திக் கொள்ள எத்தனையோ மேக்கப் வழிகள் உள்ளது . ஆனால் திறமை தான் இன்றைக்கு ஊடகத்தில் தனக்கான இடத்தை உறுதி படுத்தும் . ஆனால் இன்றைக்கு ஊடகங்களில் கருப்பு ,சிவப்பு என்பதை தாண்டி வேறு மாதிரியான அரசியல் புரையோடி போயிருக்கிறது .அது உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் தனக்கு கீழே இருப்பவர்களை கை தூக்கி விடும் இடத்தில் ,வாய்ப்பளிக்கும் இடத்தில் மதத்தை சார்ந்தவர் ,சாதிக்காரர் , ஊர்க்காரர் இப்படியாக ஒருவரை வளர்ப்பதில் ஆரம்பிக்கிறது. அதனால் திறமையை தாண்டி போராட வேண்டிய கட்டாயம் பத்திரிக்கையாளர்களுக்கு இருக்கிறது..
அரசியல் என்பது பெண்களுக்கு தொடர்பில்லாதது என்ற நிலைதான் பெரும்பாலும் இன்றும் நிலவுகிறது. ஓட்டுப்போடுவதோடு பெண்களின் கடமை முடிந்துவிடுகிறது. இந்த நிலையில் அரசியல் விவாதங்கள் நடத்தும் உங்கள் உணர்வு என்ன?
உண்மையாகவே  தமிழகத்தில் காட்சி ஊடகத்தில் ஒரு மணி நேரம் நேரலையில் அரசியல் விவாதம் செய்த முதல் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்  என்ற வெற்றி வரலாறு என்னில் இருந்து தொடங்குகிறது என்பது பெருமை தான் .அதுவும் மேலே சொல்லப்பட்ட எந்த அரசியல் பின்னணியும் இன்றி உழைப்பாலும் திறமையாலும்   யாருடைய தயவுமின்றி அந்த இடத்தை எனதாக்கி கொண்டதில் பெரும் மகிழ்வு எனக்கு இருக்கிறது.கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குனராக திரு.ரமேஷ் பிரபா இருந்த போது வழக்கமாக ஊடகத்தில் பெண்களுடைய காலம் என்பது மிக குறைவு .ஆனால் உங்களுடைய 65 வது வயதில் கூட இதே ஊடகத்தில் நீங்கள் ஒரு நிகழ்ச்சியை நடத்தவோ ,விருந்தினராக பங்கேற்கவோ செய்வீர்கள் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று என்னை பார்த்து சொன்னார் . உண்மையாக அந்த வார்த்தையை காப்பாற்றுவேன் .. பெண்கள் அரசியல் பேசுவதே இல்லை என்ற கருத்து உள்ளது ..இப்போது தான் கல்வி கிடைத்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள் ..என்னுடைய கட்டுரை தொகுப்பின் முன்னுரையில் பெண்கள் அரசியல் பேசுவது குறித்து தான் எழுதி  இருக்கிறேன் .இன்னும் நிறைய பெண்கள் ஊடகத்திற்கு வர வேண்டும் .
11193426_977066878978673_3189635229700502697_n
பெரும்பாலும் ஆண்களே கோலோச்சும் அரசியல் விவாத நிகழ்ச்சியில் நீங்கள் ஜொலிப்பது எப்படி
தொடர் வாசிப்பு தான் முதல் காரணம் .பிறகு குறிப்பிட்ட ஒரு செய்தி அனைத்து பத்திரிக்கைகளின் வெவ்வேறு கோணத்தில் வந்திருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்வேன் .. வீட்டை கவனிப்பது,குழந்தையை வளர்ப்பது இப்படி தொடங்கி ஊடக பெண்களால் பல்வேறு குடும்ப சூழலுக்கு நடுவே தான்  பணியாற்ற முடிகிறது . இத்தனை நாட்கள் பெண்கள் அரசியல் வெளிகளுக்கு வருவதில் ,அரசியல் பேசுவதில் சுணக்கம் காட்டியதற்கு  அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்..ஆனால் இன்றைய பெண்கள் அனைத்து துறையிலும் சவாலை எதிர்கொள்ள தயாராகி விட்டார்கள் . அதில் அரசியலும் அடக்கம் . பெண் பத்திரிக்கையாளர்கள் என்றால் அழகு குறிப்புகளும் , சமையல் குறிப்புகளும் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் உள்ளூர் அரசியல் முதல் சர்வதேச அரசியல் வரை எழுதவும் பேசவும் செய்வார்கள் . பெண்கள் வரமாட்டார்கள் என்று நினைக்கும் இடத்தில் நான் இருக்க வேண்டும் என்று நினைப்பது தான் என்னை அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த வழிவகை செய்துள்ளது.
உங்கள் எதிர்கால லட்சியம்..?
நான் இன்று ஒரு பத்திரிக்கையாளராக இருக்கிறேன் என்றால் அதற்கு பின்னால் என்னுடைய ஆர்வமும் அதை அடைவதற்கு நான் எடுத்த முயற்சிகள் ,கடும் உழைப்பு ,செய்த தியாகங்கள் ,இழப்புகள் இவை மட்டும் தான் காரணம் . எனக்கு அரசியல் குடும்ப பின்னணியோ,இயக்க பின்னணியோ ,பத்திரிக்கையாளர் குடும்ப பின்புலம் இப்படி எனக்கு எதுவுமே கிடையாது. எங்கள் கிராமத்தில் முதல் பத்திரிக்கையாளர் நான் தான் . என் எதிர்காலத்தில் ஒரு சானலை வழி நடத்தக் கூடிய தலைமை பொறுப்பில் அமர்வது தான் என்னுடைய இலக்கு. ஏற்கனவே சொன்னது போன்று என்னுடைய இறுதி கால கட்டம் வரை என்றும் பத்திரிக்கை உலகிலயே தான் இருப்பேன்
வளரும் இதழாளர்களுக்கு உங்களது அறிவுரை, வழிகாட்டல்கள் என்ன..
இன்றைக்கு வர கூடியவர்கள் பெரும்பாலும் வாசிப்பு திறன் வளர்த்துக் கொள்வது குறைவாக இருக்கிறது . கொடுக்கப்பட்ட வேலையை அப்படியே செய்யாமல் அதில் தன்னை நிருபிக்க என்ன வாய்ப்பு இருக்கிறது என்று பார்ப்பது தான் அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்த்தும். சில இளம் பத்திரிக்கையாளர்கள் வரும் போது ஆர்வத்துடன் வருகிறார்கள் ..பிறகு இதுவும் ஒரு அலுலவக வேலை தான் என்ற நிலைக்கு வந்து விடுகிறார்கள் அல்லது அத்தகைய மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள் . இன்னும் தமிழ் ஊடகம் கடக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது ..பெரிய புலனாய்வு அதாவது ஸ்டிங் ஆப்ரேசன் போன்ற வேலையை எல்லாம் தமிழ் பத்திரிக்கையாளர்கள் செய்வதில்லை. வருங்காலங்களில்  சர்வதேச ஊடகங்கள் தரத்திற்கு தமிழ் ஊடகங்களும் மாறும் என்று நம்புகிறேன் .