1

கோவை: நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் வெள்ளை சர்க்கரை (ஜீனி)க்கு தடை விதிக்கப்படும், தமிழ்த்தாய் வாழ்த்து எரிக்கப்படும் என அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோவை பகுதியில் சீமான் பேசியதாவது:

“ஜெயலலிதா மார்கெட் குறைந்த பழைய சினிமா நடிகை, கருணாநிதி மார்கெட் இழந்த ஒரு கதாசிரியர்.  மத்தபடி இவர்களைப்பற்றிச் சொல்ல ஏதுமில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெள்ளை சர்க்கரை (ஜீனி)யை  தடை செய்வோம். கருப்பட்டி, பனங்கற்கண்டுகளை பயன்படுத்த சொல்லுவோம். ‘இல்ல.. எனக்கு அதுதான் பழகிப் போச்சு!’ என்று சொன்னால், அந்த வெள்ளை சர்க்கரைக்கு வரியை இரட்டிப்பாக்குவோம். அதைத் தின்று சாக விரும்பினால், எங்களுக்கு வரி கொடுத்திட்டு சாவு.

மேம்பாலங்களை எல்லாம் இடிப்பேன். அனைத்து வழிகளும் பாதாள வழிப்பயணமாக மாத்துவேன். தானியங்கி பேருந்துகளை கொண்டு வந்து அதைக் கண்காணித்துக் கொள்ள ஊனமுற்றோரையும், திருநங்கைகளையும் பணியமர்த்துவேன்.

தமிழகத்துக்கு ஐந்து தலை நகரம் உருவாக்குவேன்.  சென்னையை திரை மற்றும் கணினி துறையின் தலைநகராக தொடர வைப்போம்,  திருச்சியை நிர்வாகத் தலை நகராக மாற்றுவோம், கன்னியாகுமரியை மெய்யியல் தலைநகராக மாற்றுவோம், மதுரையை கலை, பண்பாடு, இலக்கிய தலை நகராக மாற்றுவோம்,  கோவையை தொழிற்துறையின் தலை நகராக மாற்றுவோம்.

நிலங்களை உரிமையாளர்களிடமிருந்து குத்தகைக்கு வாங்கி அரசே அதில் விவசாயம் செய்யும். அதில் விவசாயிகள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். அவர்கள் அனைவருமே அரசு ஊழியர் ஆக்கப்படுவார்கள்.

தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து எனப்படும் “ நீராரும் கடலுடுத்த பாடல்..” தமிழ்த்தாய் வாழ்த்தே அல்ல. அதில்  திராவிடர் நல் திருநாடு என்று வருகிறது.  அந்த பாடலை கொளுத்துவோம்” – இவ்வாறு பேசி வாக்கு சேகரித்தார் சீமான்.