1
நெல்லை:
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுவிலக்கு அமல்படுத்தப்படும்  என்று தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
‘பூரண மதுவிலக்கு பெண்கள் சந்திப்பு’என்ற உரையாடல் நிகழ்ச்சி, திருநெல்வேலி மாவட்டம் வெங்கடாம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.  மதுவினால் நேரடியாக, மறைமுகமாக பாதிக்கப்பட்ட கிராமப்புற பெண்கள், விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், முதியோர், மாணவிகள் கலந்துகொண்டார்கள். இந்தக் கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“திமுக ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பாகதான் இருக்கும். மதுவால் சீரழிந்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் குடிப்பதற்காகவே கொள்ளையடிக்கும் அவலநிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
மது பழக்கத்தினால் இளைஞர்கள் வேலைக்கு போவது குறைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும்” – இவ்வாறு கனிமொழி பேசினார்.
முன்னதாக மதுரை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழக அமைச்சர்கள் பல முறை மாற்றப்பட்டனர். ஆனால் அதற்கான விளக்கத்தை இது வரை இந்த அரசு அளிக்கவில்லை.
தற்போது அமைச்சர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிமுக தலைமை விளக்கம் அளிக்க வேண்டும்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்படும் போதே அம்மாவுக்கு தெரியாமல் ஒன்றும் நடக்காது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமைச்சர்கள் செய்யும் தவறுகள் தனக்கு தெரியாமல் நடப்பது போல ஜெயலலிதா காட்டிக் கொள்வதை ஏற்க முடியாது” என்றார்.