அனைவருக்கும் தரமான கல்வி.. சொந்த வீடு! நிஜமான புரட்சி தலைவர் காஸ்ட்ரோ!

Must read

பிடல் காஸ்ட்ரோ

தனியார் பள்ளிகளே இல்லாமல் முழுவதும் அரசே பள்ளிகளை நடத்தி அதில் இலவசமாக கல்வி கொடுத்து 99.8 சதவீதம் கல்வி அறிவு பெற்ற நாடாக கியூபா விளங்குகிறது. இதற்கு அந்நாட்டின் தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் தலைமைதான் காரணம் என்றால் அது மிகையாகாது.

1926ம் ஆண்டு பிறந்து பொதுவுடமைச் சித்தாந்தத்தின் மேல் ஈர்ப்பு கொண்டு அதன் வழி சென்றவர் பிடல் காஸ்ட்ரோ. 1959ல் புரட்சியை நடத்தி கம்யூனிச நாடாக கியூபாவை மாற்றிக் காட்டி, அதன் பிரதமராகவும் அதிபராகவும் இருந்தவர் அவர். இப்படி 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ 2008 ம் ஆண்டு பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் கடந்த 25ம் தேதி உலகில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்.
முதலாளித்துவ நாடான அமெரிக்காவை எதிர்த்து கம்யூனிச நாடாக கியூபாவை தலைமை தாங்கி நடத்திய காஸ்ட்ரோவின் காலத்தில் சமூக சமத்துவத்திற்கான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தாலும், அனைத்தையும் தாண்டி கல்வி, சுகாதாரம் என அனைத்து மக்களுக்கும் தேவையான அனைத்தையும் இலவசமாக வழங்கி பொதுவுடமை தத்துவங்களை நிலைநாட்டும் பணியில் தான் மறையும் வரை இணைத்து பயணித்தவர்.

தனியார் பள்ளிகளே இல்லாத நாடு கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது. தனியார் கல்லூரிகளும் கிடையாது. 6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர்.
தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இங்கு மகப்பேறின் போது உயிரிழக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவு. அதே போன்று உலகிலேயே எச்ஐவி கிருமிகள் பாதித்த நோயாளிகள் குறைவாக உள்ள நாடும் கியூபாதான் என்கிறது புள்ளி விவரங்கள்.

தொழில் நுட்பத் துறையில் கலக்கும் பெண்கள் கியூபாவில் உள்ள தொழில் நுட்பத் துறைகளில் பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இங்கு பணிபுரிவோரில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். 30 சதவீதம் மட்டுமே ஆண்கள். மேலும், ஆண்களுக்கு அதிக ஊதியம். அதே வேலை செய்யும் பெண்களுக்கு குறைவான ஊதியம் என்ற ஏற்றத்தாழ்வுகள் கியூபாவில் இல்லை. ஆண்கள் என்ன தொகை சம்பளமாக பெறுகிறார்களோ அதே வேலையை செய்யும் பெண்களுக்கும் அதே சம்பளம்தான் வழங்கப்படு எல்லோருக்கும் சொந்த வீட்டை சாத்தியமாக்கிய பிடல் கியூபா நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் சொந்த வீட்டை சாத்தியமாக்கி கொடுத்தது பிடல் காஸ்ட்ரோவின் தலைமை. 2015ம் ஆண்டின் கணக்குப்படி கியூபாவில் 95 சதவீத பேர் சொந்த வீட்டின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். சொந்த வீடு இல்லாத கியூப மக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அங்கு சமத்துவம் நிலைகொண்டிருந்தது. சொந்த வீடு வைத்திருக்கும் யாருக்கும் சொத்து வரி கிடையாது. அதே போன்று கடனுக்கு வீடு வாங்கி இருந்தால் வீட்டுக் கடனுக்கு வட்டியும் கிடையாது.

இப்படி நிஜமான புரட்சித் தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் காஸ்ட்ரோ.

More articles

Latest article