நீயா நானா
கோபிநாத்

 
நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  மோசமான அனுபவத்தை அடைந்த ஒருவரின் முகநூல் பதிவை ஏற்கனெவே வெளியிட்டிருந்தோம். அதே போல ஒரு அனுபவத்தை அடைந்த இன்னொருவரின் அனுபவம் இது.  அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஆண்டனியின் மிரட்டலையும் சந்தித்திருக்கிறார் இவர்.  (வாட்ஸ்அப்பில் வந்தது.)
விஜய் டி.வி.. நீயா நானா நிகழ்ச்சியில் “பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதிய சுதந்திரம் கொடுக்கப்படாததற்கு என்ன காரணங்கள்?” என்ற விவாதத்தில் கலந்துகொண்ட அனுபவம் பற்றி ஏற்கெனவே எழுதி இருந்தேன்.
அதன் தொடர்ச்சி இது.
தலைப்பு. கருத்தை ஆதரித்துப் பேசுவதற்கு, அதிக கட்டுப்பாடுகள் உள்ள சில கல்லூரியிலிருந்து மாணவர்களையும், அதை ஆதரிக்கும் சில பேராசிரியர்களையும், பத்திரிகை நிருபர்களையும் அழைத்திருந்தனர். எதிர் அணியில் கல்லூரிப் பேராசிரியர்கள், நிர்வாகத்தினர் போன்றோர்களை அழைத்திருந்தனர். மாலை ஐந்தரையிலிருந்து ஆறு மணிக்குள் வந்துவிட வேண்டுமென கூறியிருந்தனர். மழையாக இருந்ததால் நெரிசலில் தாமதமாகிவிடக் கூடாதென்று சற்று முன்னரே சென்றுவிட்டேன். பல மாணவர்களும் சில ஆசிரியர்களும் வந்திருந்தனர். மழைநீரில் உணவுப் பொட்டலம் வாங்க வந்தவர்களைப்போல வரவேற்க ஆளின்றிக் காத்திருந்தோம்.
சற்று நேரத்துக்குப் பின் படப்பிடிப்புத் தளத்துக்குள் சென்று, ஆங்காங்கு கிடந்த சில இருக்கைகளை எடுத்துப் போட்டுக்கொண்டு சிலபேர் அமர்ந்து கொண்டோம். பலபேர் இருக்கைகளின்றி நின்றுகொண்டிருந்தனர். ஆறரை மணியளவில் ரவா கிச்சடியும் காப்பியும் வைத்து அங்கு வேலை செய்பவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நமக்கும் தான் என நினைத்து எங்களில் சிலரும் சாப்பிட்டார்கள். பின் ஏழரை வரை எந்த தகவலும் இல்லை. ஏழரைக்குப்பின் நிகழ்ச்சி இருக்கையில் அமரவைக்கப் பட்டோம். மீண்டும் ஒரு மணிநேரம் காக்கவைக்கப் பட்டபின் திரு.கோபிநாத் வந்தார். அதன்பின் திரு.ஆன்றனி என்பவர் பேராசிரியர் பகுதியில் வந்து, உங்களுக்கு எதிராகத்தான் பதிவுசெய்யப் போகிறோம் என்றார். மாணவர்களிடம் சென்று ஏதோ உசுப்பேத்தினார். அந்த அணியை ஒரு கத்தியைத் தீட்டுவது போல தயார் செய்தார்.
ஒரு வழியாக நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். முதலில் மாணவர்களிடம், உங்கள் கல்லூரியில் என்னென்ன கெடுபிடிகள் இருக்கின்றன என ஆரம்பித்தார் திரு.கோபிநாத். மாணவர்கள் சில நியாயமான பிரச்சனைகளை வைக்கும் போதெல்லாம், இவ்வளவுதானா? இதற்காகவா போராடினீர்கள்? என பல உத்திகளைப் பயன்படுத்தி, அவர்களைக் கல்லூரிகளுக்கு எதிராகக் கடுமையானக் குற்றச்சாட்டுகளை வைக்குமாறு தூண்டினார்.
“அடிக்கிறார்கள், ஆண் பெண் மாணவர்களைப் பிரித்து வைக்கிறார்கள், தனிப்பட்ட விசயங்களில் தலையிடுகிறார்கள். கைபேசிக்குத் தடை விதிக்கிறார்கள்” எனப் பலக் குற்றச்சட்டுகளை மாணவர்கள் வைத்தனர். சில மாணவர்கள் கல்லூரிப் பெயர்களைச் சொல்லத் தயங்கியபோது வற்ப்புறுத்திச் சொல்ல வைத்தார்.
பின் ஒலிவாங்கி என்னிடம் தரப்பட்டது. நான், தமிழகத்தில் 540 – க்கும் மேற்பட்டக் கல்லூரிகள் உள்ளது, அதில் ஏதோ ஒரு பத்துக் கல்லூரிகளில் நடக்கக்கூடிய சில விரும்பத்தகாத விசயங்களை எடுத்துக்கொண்டு, இதுதான் கல்லூரிகளில் நடக்கிறது எனப் பேசுவது ஒட்டுமொத்தமாக இந்தத் தலைப்பைத் திசை திருப்புவதாக அமையும் என்று பேசினேன்.
அதற்கு திரு.கோபிநாத், அப்படியானால் இந்த விவாதத்தை இத்துடன் முடிக்கவேண்டியது தானா? எனக் கூறினார். பின் ஒலிவாங்கி அடுத்தவரிடம் தரப்பட்டது. பெரும்பாலும் கருத்தை ஆமோதித்துப் பேசும்படி பார்த்துக் கொண்டார்கள்.
குறிப்பாக மாணவர்கள் அணியில் பேசிய பெண் நிருபர் ஒருவர், மாணவர்கள் கல்லூரிப் பருவத்தில்தான் காதலிப்பார்கள். அதை எப்படி கல்லூரி நிர்வாகங்கள் எதிர்க்கலாம் என்றே பேசினார். மூன்று மணிநேர ஒளிப்பதிவுக்குப் பின் ஒரு இடைவேளை விடப்பட்டது. அப்போது திரு,ஆன்றனி அவர்களிடம் சென்று விவாதம் குறுகிய கண்ணோட்டத்தோடு செல்கிறது. உண்மையானப் பிரச்சனைகளைப் பேச அனுமதியுங்கள் எனக் கேட்டேன். கடைசியில் பேசலாம் என்றார்.
இடைவேளை முடிந்ததும் ஒலிவாங்கி என்னிடம் தரப்பட்டது. இத்தனைக் கல்லூரிகளுக்கும் தகுதியான மாணவர்களும், தரமான ஆசிரியர்களும் கிடைப்பார்களா என்ற எந்த ஆலோசனையும் இல்லாமல் கல்லூரிகளைத் திறந்து விட்டோம். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு இந்தப் படிப்பைப் படிக்கும் திறமையும், பொறுப்பும் உள்ளதா எனச் சிந்திக்காமல் சேர்த்திருக்கிறார்கள். பள்ளிகள்கூட மாணவர்களை மதிப்பெண்கள் எடுக்கும் எந்திரங்களாகத்தான் உருவாக்கியிருக்கிறார்கள். பொறியியல் படிப்புக்கான அடிப்படைக் கணிதத்தைக் கூட கற்பித்து அனுப்பவில்லை. எனவே பெற்றோர்கள் கண்டிப்பான கல்லூரியில் சேர்த்தாலாவது பிள்ளைகள் பொறியியலில் தேர்ச்சியடைய மாட்டார்களா? என்ற ஆசையில் கண்டிப்பான கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க முயற்சிக்கிறார்கள். இப்படித்தான் கண்டிப்பான கல்லூரிகள் வளர்கின்றன என விவாதத்தைத் தொடங்கிவைத்தேன்.
விவாதம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் படிக்க விருப்பமில்லாத மாணவர்களை வற்புறுத்திப் படிக்கவைப்பது தனிமனித உரிமைக்கு எதிரானது. அதற்குப் பதிலாக அவர்களை அப்படியே அவர்கள் போக்கில் விட்டு விடுவது நல்லது என்று திரு.கோபிநாத் பேச ஆரம்பித்தார். அப்போது என் கல்லூரியில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாகவைத்து, ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் படிக்கிறான். சரியாகப் படிக்காமல் பல பாடங்களில் தேர்ச்சியடையாதிருந்தான். அவன் தந்தை வந்து ” ஐயா என் மகன் படிப்பில் தான் எங்கள் குடும்பத்தின் எதிர்காலமே இருக்கிறது. எப்படியாவது அவனைப் படிக்கவைத்து விடுங்கள்” என்று மன்றாடுகிறார். அவனைக் கட்டாயப் படுத்திப் படிக்கவைப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று பேச ஆரம்பித்தேன்.
என் பேச்சைத் தொடங்கியதுமே திரு.ஆன்றனி அரங்கத்தின் வெளியே இருந்து கத்துகிறார். “நீ எப்படி செருப்புத் தைக்கும் தொழிலாளி என்று பேசலாம்” என்று. நான் சொல்லவந்த கருத்தைக்கூட உள்வாங்க முயலவில்லை. ஒரு கல்லூரி முதல்வரிடம் இத்தனை பேராசிரியர்கள் மாணவர்கள் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அரிச்சுவடிகூட தெரியாதவர்தான் மாணவர்களிடம் எப்படி கல்லூரிகள் நடந்து கொள்ள வேண்டும் என்ற பாடம் நடத்த முயல்கிறார்.
ஒருவாறாக ஆறு மணி நேரம் நடந்த ஒளிப்பதிவின் இறுதிக் கட்டம். விருந்தினர்கள் பகுதி. இந்திய ஆட்சித்துறை பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஒரு பெண்மணி பேசுகிறார்; “பள்ளிப் படிப்பின்போது மாணவர்களுக்கு காதலிக்க முடிவதில்லை,வேலைக்குச் சென்றுவிடால் காதலிக்க நேரமில்லை, ஆக கல்லூரிக் காலங்களில்தான் காதலிக்க முடியும். அதைக் கல்லூரி நிர்வாகங்கள் ஏன் அனுமதிக்க மறுக்கிறார்கள்” என்று தன் கருத்தை முன்வைக்கிறார். இன்னொரு விருந்தினர், “எவ்வளவு குறைந்த மதிப்பெண்கள் பெற்று பொறியியல் கல்லூரியில் நுழைந்தாலும் ஆசிரியர்களும் பாடத்திட்டமும் சரியாகயிருந்தால் தேர்வடையலாம்” என்கிறார். மேற்கத்திய நாடுகளில் அப்படித்தான் நடக்கிறது என்று கூறுகிறார்.
மேற்கத்திய நாடுகளில் உயர்கல்வித்துறையில் மாணவர்களின் தேர்ச்சிக்கு ஆசிரியர்களைவிட மாணவர்களின் முயற்சிதான் அதிகம் என்ற உண்மை அவருக்கும் தெரியும். தமிழகத்தில் தரமானப் பொறியியல் படிப்பைத் தரக் கூடிய பல பொறியியல் கல்லூரிகள் உள்ளன. சில கல்லூரிகளில் குறைபாடுகளும் உள்ளன. சில காரணங்களால் பொறியியல் படிப்பின் தரம் குறைந்துள்ளது என்பது உண்மை. அதற்கான காரணங்களை ஆராய்ந்து போதிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கும் கல்லூரி நிர்வாகங்களுக்கும் உள்ளது.
அதை சரியான முறையில் சுட்டிக்காட்டாது, தான் நினைத்த கோணத்தில் ஆறரை மணி நேரங்கள் எடுத்து, ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியாக சுருக்கி ஒளிபரப்பி, உண்மையைக் கொண்டு வருவதை விட, தாம் நினைக்கும் கருத்தை சமுதாயத்தில் விதைக்க இந்த ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அதற்கு நாமும் துணைபோய் விட்டோமோ என்ற மன உளைச்சல், என் பல நாட்கள் தூக்கத்தை பறித்துக் கொண்டிருக்கிறது.”