Stalin auto

 

நாகர்கோவில்:

பிரச்சாரத்தின் போது, திடீரென ஆட்டோவில் ஏறி ஃபுட்போர்ட் அடித்து தொண்டர்களை குஷிப்படுத்தினார் மு.க. ஸ்டாலின்.

நமக்கு நாமே என்ற பெயரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.  இதன் துவக்கமாக இன்று கன்னியாகுமரியில் பிரச்சாரத்தை துவக்கினார்.

பிரச்சாரத்தின்போது வழக்கமாக அரசில்வாதிகள் கரை வேட்டி வெள்ளை சட்டையுடன்தான் காட்சி தருவார்கள். ஆனால் ஸ்டாலின் ப்ளூ கலர் பேண்ட்டும், ரோஸ் கலர் சட்டை, ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து ஸ்மார்ட்டாக பவனி வந்தார்.

பேண்ட்டுக்குள், சட்டையை டக் இன் செய்திருந்த அவர், கருப்பு வண்ண கூலிங்கிஸ் அணிந்து சினிமா ஹீரோ போல் அசத்தலாக காட்சியளித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு பகுதியில் வேனில் நின்றபடி,  அதிமுக அரசை விமர்சனம் செய்து ஸ்டாலின் பேசினார். அங்கு நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதைப்பார்த்த ஸ்டாலின் திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி ஆட்டோக்களை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்.  உடன் இருந்த பாதுகாப்பு வீரர்கள் எதுவும் அறியாமல், அவர்  பின்னாலேயே ஓடினார்கள்.

அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறிய ஸ்டாலின், மெதுவாக செல்லுமாறு ஓட்டுனரிடம் கூறினார். இதையடுத்து மகிழ்ச்சியடைந்த ஓட்டுனர் குஷியுடன் ஆட்டோவை மெல்ல ஓட்ட.. ஸ்டாலின் ஆட்டோவின் பக்கவாட்டில் நின்றபடியே பயணித்து  பொது மக்களை நோக்கி கையசைத்தார்.

இதன்பிறகு ஆட்டோ டிரைவர், ஸ்டாலினிடம் செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என ஆசையுடன் கேட்க, ஸ்டாலினும் அனுமதித்தார்.

“வழக்கமான அரசியல்வாதி போல இல்லாமல், டிப்டாப்பாக டிரஸ் செய்து வந்ததோடு, ஆட்டோவில் ஏறி ஃபுட்போர்டில் பயணித்து ஒரு ஷூட்டிங் பார்த்த திருப்தியை ஏற்படுத்திவிட்டார் தளபதி!” என்று கட்சிக்காரர்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

தொண்டர்கள் சிலர் மிகுந்த உற்சாகம் அடைந்து, ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் வரும் “ஆட்டோக்காரன்..” பாடலின் வரிகளான, “அஜக்கு இன்னா அஜக்கு தான்  குமுக்கு இன்னா குமுக்கு தான்!” என்ற வரிகளைப்பாடி  மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தனது இளமைப்பருவத்திலேயே தி.மு.க.வுக்கான பிரச்சார நாடகங்களிலும், பிறகு  தூர்தர்ஷன் டிவியில் ஒளிபரப்பான “குறிஞ்சி மலர்”, சன் டிவியில் ஒளிபரப்பான “சூர்யா” ஆகிய சீரியல்களிலும் நடித்ததோடு, தற்போது தேர்தல் பிரச்சார படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.